சென்னை:''சென்னையில் மட்டும் அல்லாமல், அனைத்து மாவட்டங்களிலும், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் துவக்கப்பட்டுள்ளன,'' என, தமிழக ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவன தலைமை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் தெரிவித்தார்.இந்திய தொழில் கூட்டமைப்பான சி.ஐ.ஐ., சார்பில், 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் எழுச்சி கருத்தரங்கம், சென்னை தரமணியில் நேற்று நடந்தது.இதில், சிவராஜா ராமநாதன் பேசியதாவது:தமிழக அரசு, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு தனி திட்டங்கள், நிதியுதவி, முதலீட்டு வாய்ப்பு உட்பட பல ஆதரவுகளை வழங்கி வருகிறது. இதனால், 2021ல், 2,300ஆக இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது, 8,900 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தான் அதிக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவக்கப்பட்டு வந்தன. இதனால், தமிழக ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கையில், சென்னை பங்கு அதிகமாகவும்; மற்ற மாவட்டங்களின் பங்கு குறைவாகவும் இருந்தது. தற்போது, மதுரை, கோவை என, அனைத்து மாவட்டங்களிலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவக்கப்பட்டு வருகின்றன. ஆசிய நாடுகளில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவக்க சாதகமான சூழல் நிலவுவதில் சென்னை, 18வது இடத்தில் உள்ளது. தமிழக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முதலீடு கிடைக்க, நிறுவனம் - முதலீட்டாளரை ஒருங்கிணைக்கும், 'டான்பண்ட்' திட்டம் துவக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக, கடந்த நான்கு மாதங்களில், நிறுவனங்கள், 80 கோடி ரூபாய் முதலீட்டை திரட்டியுள்ளன. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பயன் பெற, சென்னையில், 2025 பிப்ரவரியில் உலக ஸ்டார்ட் அப் மாநாட்டை அரசு நடத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.சி.ஐ.ஐ., தமிழக தலைவர் ஸ்ரீவத்ஸ்ராம் பேசும்போது, “ஸ்டார்ட் அப் நிறுவனம் துவக்குவோர், தங்களிடம் ஒரு யோசனை இருந்தால், ஒரு தீர்வு இருந்தால், அதை மற்றவர்களிடம் இருந்து எப்படி வித்தியாசமாக இருக்கிறது என்று தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டும். இந்தியாவில் மட்டுமின்றி உலகளாவிய தேவைகளையும் பார்க்க வேண்டும்,” என்றார்.கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் சுனில் டேவிட் பேசும்போது, ''ஸ்டார்ட் அப் நிறுவனங்களாலும் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. மத்திய பட்ஜெட்டில், 'ஏஞ்சல்' வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அதிக முதலீடு கிடைக்கும்,'' என்றார்.தமிழகத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை, 2021ம் ஆண்டில் 2,300 ஆக இருந்தது; தற்போது 8,900 ஆக அதிகரித்துள்ளது