ஜி.எஸ்.டி., ஒழுங்கமைப்பு கூட்டம்புதுடில்லி:அடுத்த மாதம் 9ம் தேதி ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக வரி விகித ஒழுங்கமைப்பிற்கான அமைச்சர்கள் குழுக் கூட்டம் நடைபெற்றது. பீஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரியை அமைப்பாளராகக் கொண்ட ஏழு மாநிலங்கள் இடம்வகிக்கும் குழுவின் முதலாவது கூட்டத்தில், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட வேண்டிய வரிவிகித மாற்றங்கள், வரிவிகித எளிமைப்படுத்தல், ஜி.எஸ்.டி., விலக்கு பட்டியல் மறுஆய்வு, ஜி.எஸ்.டி., வருவாயை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் பரிந்துரைகள் மீது, செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் முடிவெடுக்கும்.சிமென்ட் துறையில் ரூ.1.25 லட்சம் கோடி முதலீடு புதுடில்லி:அதிகரித்து வரும் சிமென்ட் தேவையை நிறைவு செய்யும் நோக்கில், அடுத்த இரண்டு ஆண்டுகளில், 1.25 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய சிமென்ட் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தரஆய்வு நிறுவனமான கிரிசில் தெரிவித்துள்ளது. வரும், 2027ம் ஆண்டுக்குள், 13 கோடி டன் சிமென்ட் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் என, அத்துறை எதிர்பார்ப்பதாகவும்; இது இப்போதுள்ள மொத்த உற்பத்தித் திறனில், ஐந்தில் ஒரு பங்கு என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த மூன்று நிதியாண்டுகளில் சிமென்ட் தேவை சராசரியாக 10 சதவீதம் அதிகரித்து வந்துள்ளதால், உற்பத்தியை அதிகரிக்க அதிக முதலீடு செய்வதற்கு சிமென்ட் நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக கிரிசில் அறிக்கை தெரிவித்துள்ளது. 'ஆன்லைன் வணிகத்திற்கு இந்தியா எதிரானதல்ல'புதுடில்லி,:ஆன்லைன் வணிகத்திற்கு இந்தியா எதிரானதல்ல, ஆனால் நேர்மையாகவும் நியாயமாகவும் அது நடைபெற வேண்டும் என்றே விரும்புவதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்து உள்ளார். ஆன்லைன் வணிகம் பெருமையல்ல, அச்சப்பட வேண்டியது என, நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்த பியுஷ் கோயல், அது பற்றி நேற்று விளக்கம் அளித்துஉள்ளார். டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஆன்லைன் வணிகத்தை வரவேற்பதாகவும் அதேநேரம், அனைவருக்கும் சமமான போட்டி வாய்ப்பை தர வேண்டும் என்றும் கூறினார். ஆன்லைன் வர்த்தகத் துறை விரைவான, வசதியான நடைமுறைகளால் பெரும் பலன் அடைந்து வருவதாகவும், அந்த நிறுவனங்கள் இந்திய மக்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.