மெட்ரோ ரயில்களில் விளம்பரத்துக்கு அனுமதி வருவாயை அதிகரிக்க நிர்வாகம் திட்டம்
பெங்களூரு: மெட்ரோ ரயில்களில் பயணியர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தாலும், கூடுதல் வருவாய் சம்பாதிக்க பெங்களூரு மெட்ரோ நிறுவனம் ஆர்வம் காண்பிக்கிறது. ரயில்களில் விளம்பரங்கள் அமைக்க அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது.இந்தியாவின் மற்ற மாநிலங்களின் மெட்ரோ ரயில்களில், விளம்பரங்கள் பொருத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் 2011ல் மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது. 13 ஆண்டுகளாகியும், ரயில்களில் விளம்பரம் செய்ய வாய்ப்பு அளிக்கவில்லை. மெட்ரோ ரயில்களின் அழகை காப்பாற்றும் நோக்கில், விளம்பரம் செய்ய அனுமதி அளிக்க, பெங்களூரு மெட்ரோ நிறுவனம் விரும்பவில்லை.கர்நாடக அரசு 'சக்தி' திட்டத்தை செயல்படுத்திய பின், மெட்ரோ ரயில்களில் பயணியர் எண்ணிக்கை குறையும் என, அதிகாரிகள் கருதினர். ஆனால் பயணியர் எண்ணிக்கை குறையவில்லை. மாறாக அதிகரிக்கிறது. தற்போது கூடுதல் வருவாய் பெற, பெங்களூரு மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மெட்ரோ ரயில்களில் விளம்பரம் அமைக்க அனுமதி முடிவு செய்துள்ளோம். ரயில்களின் அழகு பாதிக்கப்படாமல், ரயில்களின் வெளிப்பகுதியில் விளம்பரங்கள் செய்ய வாய்ப்பு அளிக்கப்படும்.பெங்களூரு மெட்ரோ நிறுவனம் ஊதா மற்றும் பச்சை நிற பாதையில், 57 ரயில்களை இயக்குகிறது. தற்போது வெறும் ஒரு ரயிலில் மட்டும் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் கூட வர்த்தக நோக்கத்துக்காக அல்ல, 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 2022ல் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதில் சுதந்திர போராட்டத்தை நினைவுகூரும் வகையில், போட்டோக்கள் இடம் பெற்றிருந்தன.தற்போது மெட்ரோ ரயில்களின் வெளிப்புறம், மெட்ரோ நிலைய வளாகத்தில் மட்டும், விளம்பரங்கள் செய்ய வாய்ப்பு அளிக்கப்படும். முதற்கட்டமாக சில ரயில்களில் விளம்பரம் வெளியிடப்படும். மக்களிடம் இதன் வரவேற்பை கவனித்து, மற்ற ரயில்களிலும் விளம்பரம் செய்ய அனுமதிக்கப்படும்.பேக்கேஜ் அடிப்படையில், விளம்பரங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். பேக்கேஜ் ஒன்றில், ஒயிட் பீல்ட் முதல் விஸ்வேஸ்வரய்யா மெட்ரோ நிலையம் வரை, 22 நிலையங்கள் வரும். பேக்கேஜ் 2ல் கிராந்தி வீரா சங்கொல்லி ராயண்ணா சிட்டி ரயில் நிலையம் முதல், செல்லகட்டா மெட்ரோ ரயில் நிலையம் வரை, 14 நிலையங்கள் இருக்கும்.பேக்கேஜ் 3ல், மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, நாகசந்திரா மெட்ரோ நிலையம் வரை, 13 நிலையங்கள் வரும். பேக்கேஜ் 4ல், சிக்பேட்டில் இருந்து சில்க் இன்ஸ்டியூட் மெட்ரோ நிலையம் வரை, 15 மெட்ரோ ரயில் நிலையம் இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.