உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரவுடியாகிறார்?: நடிகர் தர்ஷன் குறித்து போலீசார் ஆலோசனை : ரேணுகாசாமி கொலை நடந்த விதத்தால் அதிர்ச்சி

ரவுடியாகிறார்?: நடிகர் தர்ஷன் குறித்து போலீசார் ஆலோசனை : ரேணுகாசாமி கொலை நடந்த விதத்தால் அதிர்ச்சி

பெங்களூரு: ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பிய ரசிகரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் தர்ஷனின் பெயரை ரவுடி பட்டியலில் சேர்ப்பது குறித்து, போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் அவரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சித்ரதுர்காவைச் சேர்ந்தவர் ரேணுகா சாமி, 33. இவர், கன்னட பிரபல நடிகர் தர்ஷனின் நெருங்கிய தோழியான பவித்ரா கவுடாவுக்கு, ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பினார்.இதனால் கடந்த 8ம் தேதி பெங்களூரு ஆர்.ஆர்., நகர் அருகே உள்ள பட்டனகரே செட்டில் வைத்து, ரேணுகா சாமி அடித்துக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா கவுடா உட்பட 13 பேரை, கடந்த 11ம் தேதி அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீசார் கைது செய்தனர்.அன்றைய தினமே பெங்களூரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஆறு நாள் காவல் எடுத்து போலீசார் விசாரித்தனர்.

உடைகள் பறிமுதல்

போலீஸ் நிலையத்தில் வைத்து தர்ஷன் உட்பட 13 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையில் இந்த வழக்கில், மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.போலீஸ் நிலையம் முன் தர்ஷன் ரசிகர்கள் கூடுவதைத் தடுக்க, இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கம்பிகள் அகற்றப்பட்டன. ஆனாலும் போலீஸ் நிலையத்தை சுற்றி 144 தடை உத்தரவு இன்னும் அமலில் உள்ளது.விசாரணையின் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் இரவு ஆர்.ஆர்., நகரில் உள்ள வீட்டிற்கு, தர்ஷனை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.கொலை நடந்தபோது தர்ஷன் அணிந்திருந்த உடைகள், ஷூ, வீட்டிற்கு வந்ததும் அவர் குளித்த சோப்பு, பக்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கொண்டனர்.இதேபோல வழக்கின் 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள, பவன் என்பவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.இந்நிலையில் கைதான 13 பேரின் போலீஸ் காவலும் இன்று முடிவடைய இருந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றம் விடுமுறை என்பதால், நீதிபதி வீட்டிற்கு அழைத்துச் சென்று 13 பேரையும் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டு இருந்தனர்.ஆனால், நீதிபதி வீட்டிற்கு அழைத்துச் சென்றால், ரசிகர்கள் அங்கு கூடி விடுவர் என்று கருதிய போலீசார், நேற்று மாலையே தர்ஷன் உட்பட 13 பேரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இந்த வழக்கில் அரசு சார்பில் வாதாட, வக்கீல் பிரசன்ன குமார் என்பவரை நேற்று காலை அரசு நியமித்தது.நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையின்போது அரசு தரப்பில் ஆஜரான பிரசன்ன குமார், தர்ஷன் உட்பட 13 பேரிடமும் மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டி உள்ளது. அவர்களை மேலும் ஒன்பது நாட்கள், போலீஸ் காவலுக்கு அனுமதியளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.இதற்கு தர்ஷன் தரப்பில் ஆஜரான வக்கீல் எதிர்ப்புத் தெரிவித்தார். தர்ஷனை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தர்ஷன் உட்பட 13 பேரையும் மேலும் ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டனர்.

கமிஷனர் ஆலோசனை

இதையடுத்து தர்ஷன் உட்பட 13 பேரும் மீண்டும் அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு வைத்து அவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.இதற்கிடையில் நேற்று காலை பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா, அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.தர்ஷன் வழக்கில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து போலீசாருடன் ஆலோசனை நடத்தியதுடன், சில அறிவுரைகளையும் வழங்கிவிட்டுச் சென்றார்.தர்ஷன் 2011ல் தன் மனைவி விஜயலட்சுமியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவாகி இருந்தது.தற்போது ரேணுகாசாமி விவகாரத்தால் தர்ஷன் மீது கொலை வழக்குப் பதிவாகியுள்ளது. இடையில் அவர் மீது பெரிதாக எந்த வழக்கும் பதிவாகவில்லை.

மின்சாரம் பாய்ச்சி...

ரேணுகாசாமி கொலை குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் நேற்று ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.அதாவது, கொலை செய்யப்படுவதற்கு முன்பு ரேணுகாசாமி மீது மின்சாரத்தை பாய்ச்சிக் கொடுமைப்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. கொடூரமான முறையில் சித்ரவதை செய்து ரேணுகா சாமியை கொலை செய்திருப்பதால், தர்ஷன் பெயரை ரவுடி பட்டியலில் சேர்க்கலாமா என்பது குறித்தும் உயர் போலிஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் ரேணுகா சாமி கொலையில் தனக்கு பங்கு இல்லை என, தர்ஷன் கூறி வந்தாலும், அவருக்கு எதிரான ஆதாரங்களை போலீசார் மும்முரமாக திரட்டி வருகின்றனர்.இந்த வழக்கில் கைதான பத்து பேரை அப்ரூவராக மாறவைத்து, அவர்களிடம் ரகசிய வாக்குமூலம் பெறவும் போலீசார் தயாராகி வருகின்றனர்.

ரூ.5 லட்சம் நிவாரணம்

கொலையான ரேணுகாசாமி குடும்பத்தினரை, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை சங்கத்தினர் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது, ரேணுகா சாமி குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, திரைப்பட வர்த்தக சபை தலைவர் சுரேஷ் வழங்கினார்.

பாதுகாப்பு கேட்கும் தயாரிப்பாளர்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திரைப்படம் தொடர்பாக தயாரிப்பாளர் பரத்துக்கும், தர்ஷனுக்கும் பிரச்னை ஏற்பட்டது. பரத்திடம் போனில் பேசிய தர்ஷன், அவரை மிரட்டியுள்ளார். தற்போது இருவரும் உரையாடிய ஆடியோ வெளியாகியுள்ளது. இதனால் தர்ஷன் ரசிகர்கள் தன்னிடம் பிரச்னை செய்வர் என்ற பயத்தில், தனக்கு பாதுகாப்பு வழங்க பரத் கேட்டுள்ளார்.

தர்ஷனுக்கு நேரம் சரியில்லை

கொலை வழக்கில் கைதாகி உள்ள தர்ஷன், விரைவில் வெளிவர வேண்டும் என, தர்ஷனின் உறவினரான மஞ்சுநாத் என்பவர், உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை செய்தார். அப்போது ஸ்ரீ பாத பட் என்ற அர்ச்சகர், “தர்ஷனுக்கு இப்போது நேரம் சரியில்லை,” என, மஞ்சுநாத்திடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

தவறு செய்துவிட்டேன்!

அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீசார் காவலில் இருக்கும் தர்ஷன், அந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் தனக்குத் தெரிந்த சில போலீசாரிடம், “நான் செய்தது தவறுதான். இப்படி செய்திருக்கக் கூடாது,” என புலம்பியதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜூன் 16, 2024 11:32

தர்ஷன், இவன் தவறு செய்வது இதுவே முதல்முறை அல்ல. இதற்கு முன்பும் பல தவறுகளை செய்திருக்கிறான். முன்பு ஒருமுறை தன்னுடைய மனைவியை மிகவும் கொடூரமாக நடத்தியாக செய்தி படித்திருக்கிறேன். நடிகர் என்கிற தலைகனம். இந்தமுறை செய்த கொலைக்கு இவன் ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்கப்படவேண்டும்.


தமிழ்வேள்
ஜூன் 16, 2024 10:31

தங்கள் சொந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்த இயலாது காரணத்தால் தான், கூத்தாடிகள் சமூகத்தில் இருந்து தொலைவில் வைக்கப்பட்டார்கள்.. இனிமேல் ஆவது கூத்தாடிகளை தலைமேல் வைத்து கொண்டாடும் இழிவான போக்கு மாறவேண்டும்..


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி