பெங்களூரு: 'பிட் காயின்' வழக்கு தொடர்பாக, இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது நல்பாடிடம், சி.ஐ.டி., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.சில ஆண்டுகளுக்கு முன், போதைப்பொருள் வழக்கு வெளிச்சத்துக்கு வந்தது. இந்த வழக்கில் பிரபல கன்னட நடிகர், நடிகைகள் கைதாகினர். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்து, ஆழமாக விசாரித்த போது, பிட் காயின் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. இதை பற்றி விசாரணை நடத்த, மாநில அரசு எஸ்.ஐ.டி., அமைத்தது.பிட் காயின் வழக்கில், ஹேக்கர் ஸ்ரீகிருஷ்ணா என்ற ஸ்ரீகி, ராபின் கன்டேவாலா, சுனிஷ் ஹெக்டே உட்பட பலர் கைதாகினர். வழக்கு தொடர்பாக, ஜூன் 6ல் ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில் முதற்கட்ட குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தனர்.இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது நல்பாட், பிட்காயின் வழக்கில் கைதான ஸ்ரீகிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது, விசாரணையில் தெரிந்தது. பெங்களூரின், காட்டன்பேட்டில் நடந்த ஹேக்கிங் வழக்கில், இவருக்கு தொடர்பிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. எனவே நேற்று மதியம், பெங்களூரின், சி.ஐ.டி., அலுவலகத்தில் முகமது நல்பாடிடம், எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.