| ADDED : ஜூலை 26, 2024 12:33 AM
மணாலி: ஹிமாச்சல பிரதேசத்தின் மணாலி பகுதியில் மேக வெடிப்பால் மழை கொட்டியதை அடுத்து, லே - மணாலி இடையேயான தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு, போக்குவரத்து முடங்கியுள்ளது.ஹிமாச்சலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களில் மட்டும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு போன்றவற்றால், 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை, மணாலி அருகே அஞ்னி மஹாதேவ் நுல்லா என்ற இடத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டு பேய்மழை பெய்தது. பராரி உள்ளிட்ட பகுதிகளில், ஒரு சில மணி நேரத்தில் 8 செ.மீ., மழை கொட்டியது. காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகள், பாலங்களை மூழ்கடித்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.இதையடுத்து, லே - மணாலி இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அடல் சுரங்கப்பாதையின் வழியாக லாஹவுல் மற்றும் ஸ்பிதியிலிருந்து, மணாலிக்கு செல்லும் வாகனங்கள் ரோஹ்தாங் நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளன. இந்நிலையில், மேலும் நான்கு நாட்களுக்கு ஹிமாச்சலில் கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.