| ADDED : ஜூன் 18, 2024 01:11 AM
திருவனந்தபுரம், பிரதமர் நரேந்திர மோடி, போப் பிரான்சிஸ் சந்திப்பு தொடர்பாக கிண்டல் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த கேரள காங்கிரஸ், கிறிஸ்துவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில், ஐரோப்பிய நாடான இத்தாலியில் நடந்த ஜி - 7 மாநாட்டில் பங்கேற்க சென்றிருந்தார். அதில் பங்கேற்ற போப் பிரான்சிசை சந்தித்து அவர் பேசினார். இது தொடர்பான படத்தை சமூக வலை தளத்தில் வெளியிட்டு, 'கடைசியில் கடவுளை காணும் சந்தர்ப்பம் போப்புக்கு கிடைத்துள்ளது' என, கேரள காங்கிரஸ் கிண்டல் செய்திருந்தது.இதற்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன், மாநில பா.ஜ., தலைவர் சுரேந்திரன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். கிறிஸ்துவர்களை காங்கிரஸ் அவமதித்துஉள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.இதைத் தொடர்ந்து, கேரள காங்கிரஸ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:எந்த ஒரு மதத்தையும், மதத் தலைவரையும், கடவுள்களையும் அவமதிப்பது காங்கிரசின் பாரம்பரியம் கிடையாது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். கிறிஸ்துவத்தையும், கிறிஸ்துவர்கள் கடவுளாகக் கருதும் போப் மீதும் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துஉள்ளோம்.இந்த பதிவால் கிறிஸ்துவர்களை புண்படுத்தி யிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். அதே நேரத்தில் பிரதமர் மோடியை விமர்சித்ததை தவறாக கருதவில்லை. அவர் தன்னைக் கடவுளாக நினைத்துக் கொண்டு, அறிவித்துக் கொண்டு, நாட்டு மக்களை அவமதித்துள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.