உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எனக்கு ஓட்டு போட வேண்டாம் மாண்டியாவில் குமாரசாமி அதிரடி

எனக்கு ஓட்டு போட வேண்டாம் மாண்டியாவில் குமாரசாமி அதிரடி

மாண்டியா: ''மத்திய தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்களின் வலியுறுத்தலின்படி, மாண்டியாவில் போட்டியிடுகிறேன். காவிரி விஷயத்தில் அநீதி ஏற்பட்டால், எனக்கு ஓட்டு போடாதீர்கள்,'' என மாண்டியா ம.ஜ.த., வேட்பாளர் குமாரசாமி தெரிவித்தார்.மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கபட்டணாவில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் குமாரசாமி பேசியதாவது:பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தது சுயநலமல்ல. மத்திய தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்களின் வலியுறுத்தலின்படி, மாண்டியாவில் போட்டியிடுகிறேன். மாநில வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். காவிரி விஷயத்தில் அநீதி ஏற்பட்டால், எனக்கு ஓட்டு போடாதீர்கள்.

20 ஆண்டு பந்தம்

எனக்கும், மாண்டியாவுக்கும் 20 ஆண்டு பந்தம் உள்ளது. ஹாசன் நான் பிறந்த இடம் என்றாலும், எனக்கு அரசியலில் அடித்தளம் அமைத்தது மாண்டியாவும், ராம்நகரமும் தான். காவிரி விஷயத்தில் காங்கிரசார் என்ன பங்களிப்பு அளித்தீர்கள். விவசாயிகள் இறக்கும் போது, அவர்களுக்கு ஆறுதல் கூறவில்லை. நானும், தேவகவுடாவும் தான் ஆதரவு தெரிவித்தோம்.நீங்கள் கொடுத்த சக்தியால் தான், என்னால் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய முடிந்தது. நமது நீர் - நமது உரிமைக்காக போராடி வருகிறோம். கடந்தாண்டு ஆட்சிக்கு வந்த பின், தமிழகத்துக்கு எதிர்ப்பை மீறி தண்ணீர் திறந்து விட்டீர்கள். நெல்லை விளைவிக்க வேண்டாம் என விவசாய அமைச்சர் கூறுகிறார். மேகதாது கட்ட எங்களுக்கு அதிகாரம் கொடுங்கள் என கேட்கிறீர்கள். மாநிலத்தில் நீங்கள் தானே அதிகாரத்தில் இருக்கிறீர்கள்.

ஒப்பந்ததாரருக்கு சீட்

முதல்வராக இருந்தபோது, மாண்டியாவில் விஸ்வேஸ்வரய்யா கால்வாயை நவீனமயமாக்க, நிதி ஒதுக்கினேன். ஆனால் உங்கள் பாக்கெட்டை நிரப்ப, ஒப்பந்ததாரரை வேட்பாளராக அறிவித்துள்ளீர்கள்.மாநில மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகள் அளிக்க வேண்டாம். மோடி பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது. மாண்டியா மக்களை பணத்தால் வாங்க முடியாது. மாவட்ட வளர்ச்சிக்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளேன்.இவ்வாறு அவர்பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை