| ADDED : மே 01, 2024 11:41 PM
புதுடில்லி:புதுடில்லி ராமகிருஷ்ணபுரத்தில் அமைந்துள்ள உத்தர சுவாமிமலை கார்த்திகேயா கோவிலில் குருப் பெயர்ச்சி நவக்கிரஹ மஹா யாகம் கோலாகலமாக நேற்று நடந்தது. குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு நேற்று சஞ்சாரம் செய்தார். அதை முன்னிட்டு, உத்தர சுவாமி மலை கோவிலில் குரு பெயர்ச்சி விழா விமரிசையாக நடத்தப்பட்டது. நவ கிரகங்களில் முக்கியக் கிரகமும், சுபகிரகமும் ஆன குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை இடம்பெயரும் நிகழ்வு குருபெயச்சியாக கொண்டாடப்படுகிறது. நவ கிரகங்களில் குரு பகவானுக்கும், சனி பகவானுக்கும் தனி இடம் உண்டு. இந்த இரண்டு கிரகங்களும் இடம்பெயரும் நேரத்தில் ஜோதிட சாஸ்திர ரீதியாக 12 ராசிகளுக்கும் பலன்கள் வகுக்கப்படுகின்றன.நேற்று நடந்த குரு பெயர்ச்சியை முன்னிட்டு, உத்தர சுவாமி மலை கோவிலில் காலை விக்னேஸ்வர பூஜையுடன் நிக்ழ்ச்சி துவங்கியது. அதைத் தொடர்ந்து, சாந்தி பரிஹார சங்கல்பம், நவ கிரக கும்ப ஸ்தாபனம், மஹான்யாஸ ஏகாதச ருத்ர ஜபம் ஆகியவை நடத்தப்பட்டன.ஏராளாமான ரித்விக்குகள் பங்கேற்று பாராயணம் செய்தனர். அதைத் தொடர்ந்து, குரு ப்ரீத்தி, மஹாயக்னம், பூர்ணாஹூதி, தக்ஷிணாமூர்த்தி, குரு பகவான் மற்றும் நவ கிரஹங்களுக்கு பூர்ணாபிஷேகம் செய்யப்பட்டது. கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. குருபெயர்ச்சி நடந்த போது, மூலவர் குருபகவானுக்கு, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.