பெங்களூரு: ''நான் சொன்னபடி நடந்து கொள்வேன் என்ற நம்பிக்கை, மக்களுக்கு உள்ளது,'' என நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:முன்னாள் முதல்வர் குமாரசாமி மேகதாது, மஹதாயி திட்டங்களை செயல்படுத்துவதாக உறுதி அளிக்கிறார். இவர் ஆட்சியில் இருந்த போது, ஏன் செயல்படுத்தவில்லை. பதவியில் இருந்த போது, எதையும் செய்யாதவர், இனி செய்வாரா.மக்களின் கஷ்டங்களுக்கு தீர்வு கண்டு, தைரியம் அளிப்பது நாங்கள். வேறு கட்சிகளின் வேட்பாளர்கள், மக்களுக்கு உதவ மாட்டார்கள். குமாரசாமி பதவியில் இருந்த போது, எதையும் செய்யவில்லை. மேகதாது திட்டத்தை வலியுறுத்தி, காங்கிரஸ் பாதயாத்திரை நடத்திய போது, 'கபாப் தின்பதற்காக, பாதயாத்திரை நடத்துகின்றனர்' என குமாரசாமி விமர்சித்தார்.நாங்கள் போராட்டம் நடத்தியது, மக்களுக்காகத்தான். அது எங்களின் கடமை. இதை எதிர்க்கட்சியினரால் சகிக்க முடியவில்லை. காவிரி நீர்ப்பாசன பகுதி மக்களுக்கு, குறிப்பாக பெங்களூரு மக்களுக்கு குடிநீர் வழங்கும் நோக்கில், நீர்ப்பாசனத்துறை மற்றும் பெங்களூரு நகர வளர்ச்சி துறை பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். நான் சொன்னபடி நடந்து கொள்வேன் என்ற நம்பிக்கை, மக்களுக்கு உள்ளது.வறட்சி நிவாரணம் வழங்க, தாமதமாவதற்கு தேர்தல் ஆணையம் காரணம் என, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். வறட்சி நிவாரணம் வழங்கும் விஷயத்தில், மாநில அரசின் மீது குற்றம்சாட்டிய இவர், இப்போது மாநிலத்துக்கு அநியாயம் நடந்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார்.மாநில அரசு வறட்சி நிவாரணம் அளிக்கும்படி, வேண்டுகோள் விடுத்து எத்தனை மாதங்கள் ஆகின்றன. சில மாதங்களுக்கு முன்பு, தேர்தல் நடத்தை விதிமுறைகளோ, கட்டுப்பாடுகளோ இருக்கவில்லை. இப்போது தேர்தல் ஆணையத்தை காரணம் கூறுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.