திருவனந்தபுரம்: கேரளாவில், பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களில், 'ஏஐ' எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான பாடங்கள் மற்றும் செயல்முறைகள் இந்தாண்டு முதல் அறிமுகமாகின்றன.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.மாநில கல்வித்துறையில், 'கைட்' எனப்படும், கேரளா உள்கட்டமைப்பு மற்றும் கல்விக்கான தொழில்நுட்ப பிரிவு செயல்பட்டு வருகிறது. கல்வித்துறையில் தொழில்நுட்பத்தை புகுத்தும் பணியை இத்துறையினர் செய்து வருகின்றனர்.அதன்படி, ஜூன் 3 முதல் துவங்கும் புதிய கல்வியாண்டில், 1, 3, 5 மற்றும் ஏழாம் வகுப்புகளுக்கு இந்தாண்டு முதல் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் சார்ந்த பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. மலையாளம், ஆங்கிலம், தமிழ் மற்றும் கன்னட வழியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இந்த பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.குறிப்பாக, ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சம்பந்தமான பாடங்கள், செயல்முறை வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.இவற்றின் வாயிலாக, கேரளா முழுதும் ஏழாம் வகுப்பில் படிக்கும் நான்கு லட்சம் மாணவர்களுக்கு, ஏஐ தொழில்நுட்பம் குறித்த அறிமுகம் கிடைக்க உள்ளது.இது குறித்து, 'கைட்' தலைமை செயல் அதிகாரி அன்வர் சதத் கூறியதாவது:ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கான, 'கம்ப்யூட்டர் விஷன்' என்ற பாடத்தில், மனித முகங்களின் பல்வேறு விதமான உணர்வுகளை புரிந்து கொள்ளும் ஏஐ புரோகிராம்களை மாணவர்கள் சுயமாக உருவாக்க வாய்ப்பு அளிக்கப்படும்.மனித முகங்களில் ஏற்படும் ஏழு விதமான உணர்வுகளை இந்த தொழில்நுட்பம் அடையாளம் காணும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு வகுப்பில் உள்ள மாணவர்கள் அனைவரும், ஒரே விதமான ஏஐ தொழில்நுட்பத்தை ஒரே நேரத்தில் பயிலும் வாய்ப்பு, இந்திய அளவில் முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.