உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் பற்றாக்குறை தனி டெர்மினல் கட்ட இடம் இல்லாததால் சிக்கல்

ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் பற்றாக்குறை தனி டெர்மினல் கட்ட இடம் இல்லாததால் சிக்கல்

பெங்களூரு: பெங்களூரின் ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் பற்றாக்குறைக்கு தீர்வு காண, தனி டெர்மினல் கட்ட ரயில்வே திட்டமிட்டுள்ளது. ஆனால் இடம் கிடைக்காமல் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை.பெங்களூரின் பெரும்பாலான ரயில் நிலையங்களில் பிளாட்பாம்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் பல ரயில்கள் நிலையத்தில் நுழைய முடியாமல், நீண்ட நேரம் வெளியே காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.மைசூரு, பெங்களூரு, ஹூப்பள்ளி உட்பட முக்கியமான ரயில் நிலையங்களில், இந்த பிரச்னை உள்ளது என்றாலும், பெங்களூரின் கே.எஸ்.ஆர்., எனும் கிராந்தி வீரா சங்கொல்லி ராயண்ணா, யஷ்வந்த்பூரில் இந்த பிரச்னை அதிகம் உள்ளது. கன்டோன்மென்ட் ரயில் நிலையமும், இதற்கு விதி விலக்கல்ல.

எங்கெங்கே?

யஷ்வந்த்பூரில் இருந்து கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்துக்கு வரும் ரயில்கள், மந்த்ரிமால் அருகிலும்; கன்டோன்மென்டில் இருந்து வரும் ரயில்கள் சிவானந்தா ஸ்டோர் அருகிலும்; மைசூரில் இருந்து வரும் ரயில்கள், மாகடி ரோடு, பின்னி மில் கேட் அருகிலும் காத்திருக்கின்றன.அதேபோன்று வெவ்வேறு இடங்களில் இருந்து, யஷ்வந்த்பூருக்கு வரும் ரயில்கள் பானஸ்வாடி, பிரிகேட் கேட் வே அருகில், எலஹங்கா சிக்னல் அருகில் காத்திருக்கின்றன. இதற்கு பிளாட்பாரம் பற்றாக்குறையே காரணம்.இதற்கு தீர்வு காணும் நோக்கில், பெங்களூரு மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள, பின்னி மில் இடத்தை பெற்று, கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்தை விஸ்தரிக்க, தென்மேற்கு ரயில்வே துறை திட்டமிட்டது. இதற்கு மாநில அரசின் அனுமதி கிடைக்கவில்லை.இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பதால், ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. பிளாட்பாரம் பற்றாக்குறையால் பல நேரத்தில், ரயில்கள் வெளியே காத்திருக்கும் நிலை உள்ளது. கே.எஸ்.ஆர்., நிலையத்தில் இருந்து ஒரு ரயில் புறப்பட்டு முன்னோக்கி செல்லும் வரை, வேறொரு ரயில் காத்திருக்க வேண்டியுள்ளது.

பெரிய பிரச்னை

இரவு புறப்பட வேண்டிய ரயில்கள், பகல் நேரத்தில் பிளாட்பாரத்தில் நின்றிருப்பதாலும் பிரச்னை ஏற்படுகிறது. மைசூரு, மங்களூரு, ஹூப்பள்ளி என, பல இடங்களில் நிலம் கையகப்படுத்தி, தனி டெர்மினல் கட்டினால், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். ஆனால் பெங்களூரில் இடம் கிடைப்பதே, பெரிய பிரச்னையாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினார்.ரயில் பயணி கிருஷ்ண பிரசாத் கூறியதாவது:கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்தில் தண்டவாளங்கள் உயரமாகவும், சில தண்டவாளங்கள் தாழ்வான இடத்தில் இருப்பதாலும் 'இன்டர்சேஞ்ச்' செய்ய முடிவதில்லை. இதை சரி செய்ய வேண்டும். சில பிளாட்பாரம்களின் நீளம் குறைவாக உள்ளது. 24 பெட்டிகள் கொண்டுள்ள, காச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில், ஐந்தாவது பிளாட்பாரத்துக்கு வர வேண்டும்.வேறு பிளாட்பாரத்துக்கு வந்தால், பின்னால் உள்ள பெட்டிகள், வெளியே நின்றிருக்க வேண்டும். அனைத்து தண்டவாளங்களையும், ஒரே உயரத்துக்கு கொண்டு வர வேண்டும். பிளாட்பாரம்களை மறு சீரமைப்பு செய்தால், பிளாட்பாரம் பற்றாக்குறையை சரி செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sankaran Natarajan
ஆக 15, 2024 10:12

அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. மக்கள் விரோத பாஜக அரசு மக்களுக்கு ரயில் வசதியை மறுக்கிறது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை