புதுடில்லி: கேரளா மற்றும் மேற்கு வங்க சட்டசபைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர்கள் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது பதில் அளிக்கும்படி மத்திய அரசு மற்றும் இரு மாநில கவர்னர்களின் செயலர்களுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.மனு தாக்கல்மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.இந்த இரு மாநில சட்டசபைகளில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு கவர்னர்கள் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளனர்.சில மசோதாக்களை ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளனர். கவர்னரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து இரு மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது கேரள அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் வாதிடுகையில், ''கடந்த எட்டு மாதங்களாக இம்மசோதாக்களை கவர்னர் ஆரிப் முகமது கான் நிலுவையில் வைத்துள்ளார். இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது.''கவர்னர்கள் எப்போது மசோதாக்களை திரும்ப அனுப்பலாம் அல்லது ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யலாம் என்பதற்கான வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வகுக்க வேண்டும்,'' என்றார்.மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிடுகையில், ''மேற்கு வங்கத்தை போலவே தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களும் இந்த பிரச்னையை சந்தித்து வருகின்றன. ''இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றவுடன் நிலுவையில் உள்ள மசோதாக்கள் உடனடியாக நிறைவேற்றப்படும் அல்லது ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்படும்,'' என்றார்.மூன்று வாரங்கள்மேலும், ''இந்த வழக்கில் மத்திய அரசையும் ஒரு தரப்பாக சேர்த்து, அவர்களிடம் இருந்து பதில் பெற்று வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்,'' என்றார். இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம், கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் மற்றும் மேற்கு வங்க முதல்வர் ஆனந்த போஸ் ஆகியோரின் செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்.'அவர்கள் மூன்று வாரங்களுக்குள் தங்கள் பதிலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
கவர்னர்களை கட்டுப்படுத்தும்
தனி நபர் மசோதா தோல்விமாநில அமைச்சரவை குழுவின் ஆலோசனைக்கு அரசியலமைப்பு ரீதியாக கவர்னர் கட்டுப்பட்டவர் என்பதை உறுதி செய்யும் தனி நபர் மசோதா ராஜ்யசபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் எம்.பி., ஜான் பிரட்டாஸ் இந்த மனுவை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:நம் அரசு கூட்டாட்சி தத்துவத்தை வலியுத்துகிறது. ஆனால், கவர்னர்களின் செயல்பாடு கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் வகையில் உள்ளது. மாநில அமைச்சரவை குழுவின் ஆலோசனையின்படி கவர்னர் செயல்பட வேண்டும் என, பல்வேறு கமிஷன்களும் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளன. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு எதிராக செயல்படுவதையே கவர்னர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.பின், மசோதா மீது குரல் ஓட்டெடுப்பு நடத்த ராஜ்யசபா துணை தலைவர் ஹரிவன்ஷ் அனுமதி அளித்தார். அதில், மசோதாவுக்கு ஆதரவாக 21 ஓட்டுகளும், எதிராக 56 ஓட்டுகளும் பதிவாகின. இதையடுத்து மசோதா தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.