உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உதயநிதி வழக்கில் பதிலளிக்க மாநிலங்களுக்கு நோட்டீஸ்

உதயநிதி வழக்கில் பதிலளிக்க மாநிலங்களுக்கு நோட்டீஸ்

புதுடில்லி, சனாதனம் குறித்த பேச்சுக்கு எதிராக, பல்வேறு மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்கை, ஒரே வழக்காக சேர்த்து விசாரிக்கும்படி, தமிழக அமைச்சர் உதயநிதி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்கும்படி, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கண்டனம்

கடந்த ஆண்டு செப்டம்பரில், சென்னையில் நடந்த மாநாட்டில் பேசிய தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினின் மகன் அமைச்சர் உதயநிதி, 'மலேரியா, டெங்கு போல், சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்' என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுதும் பா.ஜ., தலைவர்கள், ஹிந்து அமைப்புகள் அவருக்கு கண்டனம் தெரிவித்தன.தொடர்ந்து, உதயநிதியின் பேச்சுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே, தன் மீது பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்கும்படி, உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, உதயநிதியின் கோரிக்கை குறித்து பதிலளிக்கும்படி, பல்வேறு மாநில அரசுகள் மற்றும் அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மனு தாக்கல்

மேலும், முந்தைய விசாரணையின் போது, சட்டப்பிரிவு 32ன் கீழ் உதயநிதி மனு தாக்கல் செய்ததற்கு ஆட்சேபனை தெரிவித்த நீதிபதிகள், சி.ஆர்.பி.சி., 406 - வழக்குகளை மாற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரம் குறித்த பிரிவின் கீழ் மனு தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தி இருந்தனர்.இதன்படி, உதயநிதி தரப்பில் திருத்தம் செய்யப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நீதிபதிகள் நேற்று ஏற்றுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை