| ADDED : மார் 28, 2024 10:36 PM
தங்கவயல் : பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலின் பிரம்மோற்சவத்தின் முத்தாய்ப்பாக இன்று இரவு புஷ்ப பல்லக்கு பவனி நடக்கிறது.ராபர்ட்சன் பேட்டை கீதா சாலையில் நூற்றாண்டு பழமைவாய்ந்த ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலில் 89ம் ஆண்டு பிரம்மோற்சவம் இம்மாதம் 19ம் தேதி முதல் நடந்து வருகிறது.இன்று இரவு நடக்கும் புஷ்ப பல்லக்கு பிரசித்தி பெற்ற திருவிழா. பல வகையான 2 டன் பூக்களாலும் மின்னொளி அலங்காரத்துடனும் புஷ்ப பல்லக்கு உருவாக்கப்படுகிறது.இரவு 11:00 மணிக்கு கோவிலில் இருந்து புஷ்ப பல்லக்கு புறப்பட்டு நகர் வலம் வரும். அடுத்த நாள் காலை 7:30 மணிக்கு கோவிலை வந்தடைகிறது.புஷ்ப பல்லக்கு திருவிழாவை காண கர்நாடகம், ஆந்திரா, தமிழகம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து, சுவாமியை தரிசிக்கின்றனர்.புஷ்ப பல்லக்கு திருவிழாவை முன்னிட்டு பக்திசை கச்சேரி, பஜனைகள் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இதனால் தங்கவயலில் இரவில் ஒரு பகலை காணலாம்.பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலில் புஷ்ப பல்லக்கு திருவிழாவையொட்டி கோவிலில் காலை முதலே சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் அர்ச்சனைகள், மகா மங்களாரத்தி, பிரசாத வினியோகம், அன்ன தானம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து விசேஷ பூஜைகளும் நடக்கின்றன.