உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வளர்ந்த நாடு இலக்கை எட்ட சீர்திருத்தம் அவசியம் சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

வளர்ந்த நாடு இலக்கை எட்ட சீர்திருத்தம் அவசியம் சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடில்லி, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவதற்கு, மதச்சார்பில்லாத சிவில் சட்டம், ஒரே நாடு, ஒரே தேர்தல் போன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் நாட்டுக்கு தற்போது உடனடியாக தேவை என, பிரதமர் நரேந்திர மோடிவலியுறுத்தினார்.நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி, டில்லி செங்கோட்டையில் பிரதமர்மோடி நேற்று, மூவர்ணக் கொடியை ஏற்றினார்.மூன்றாவது முறையாக பிரதமரான பின் முதல் முறையாகவும், மொத்தமாக11வது முறையாகவும் அவர் செங்கோட்டையில் இருந்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தன் மிக நீண்ட, 98 நிமிட உரையில், அவர் பல்வேறு பிரச்னைகள், விஷயங்கள் குறித்து பேசினார். அவரது பேச்சில், பொது சிவில் சட்டம், ஒரே நாடு, ஒரே தேர்தல், பெண்களுக்கு எதிரான வன்முறை, வளர்ச்சியடைந்த நாடு ஆகியவை குறித்து குறிப்பிட்டு பேசினார்.

பொதுவான கருத்து

அவருடைய உரை:நாம் சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுக்கு பிறகும், மதத்தின் அடிப்படையிலான சிவில் சட்டங்களையே பயன்படுத்தி வருகிறோம். தற்போதுள்ள சட்டங்கள், மதத்தின் அடிப்படையில் அமைந்தவை என்பது பெரும்பாலானோரின் எண்ணம். இவை, மக்களிடையே பிரிவினையை, பாகுபாட்டை ஏற்படுத்துகின்றன. மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிப்பதுடன், சமத்துவத்தை அவை ஏற்படுத்தவில்லை என்பது பெரும்பாலானோரின் பொதுவான கருத்தாகும்.நம் நாடு, மதச்சார்புஇல்லாத சிவில் சட்டத்துக்கு மாற வேண்டிய நேரம்வந்துவிட்டது. அதுவும் உடனடியாக மாற வேண்டும். இதைத் தான் நம் அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. உச்ச நீதிமன்றமும் தன் பல்வேறு உத்தரவுகளில் இதை குறிப்பிட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களின் கனவும் அதுவே.அதுபோலவே, ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கும் நாம் மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் வாயிலாக நாட்டின் நேரம், பணம் சேமிக்கப்படும். தேர்தல் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கான நம்பிக்கையும் அதிகமாகும். அடிக்கடி தேர்தல் நடப்பது, நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது.நம் அண்டை நாடான வங்கதேசத்தில், ஹிந்துக்கள் உட்பட அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து, 140 கோடி இந்தியர்களும் கவலை தெரிவித்துள்ளனர். அங்குள்ள பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். எப்போதும் போல், வங்கதேசத்துடனான நம் நட்பு சிறப்பாக இருப்பதுடன், அந்த நாட்டின் வளர்ச்சியிலும் அக்கறையுடன் உள்ளோம்.பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விரைவாக விசாரிக்கப்படுவதை, மாநில அரசுகள் முன்னுரிமையுடன் செயல்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும். இச்செயலில் ஈடுபட்டால் கடும் தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். இது போன்ற பாவச் செயல்களில் ஈடுபடுபடுவோர் துாக்கிலிடப்படுவர் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். சமூகத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துவது முக்கியம்.நம் நாடு, 2047ல் வளர்ச்சியடைந்த நாடாக விளங்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி நாம்பயணம் செய்கிறோம். இது, நம் நாட்டின் வரலாற்றின் பொற்காலமாகும்.

பெரும் பிரச்னை

இதில், இளைஞர்களுக்கு பெரும் பங்கு உள்ளது. நம் நாட்டு மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம் படிப்பதை நிறுத்துவோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில், புதிதாக 75,000 மருத்துவப் படிப்பு இடங்களை உருவாக்குவோம்.வாரிசு அரசியல் என்பது மிகப் பெரும் பிரச்னையாக பார்க்கப்படுகிறது. இதற்கு தீர்வு காண்பதற்கு, எந்த அரசியல் பின்புலமும் இல்லாத ஒரு லட்சம் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். இதன் வாயிலாக அரசியலில் புதிய ரத்தம் பாய்ச்சப்படும். அது, நம் ஜனநாயகத்தை வலுவாக்கும்.இந்த நேரத்தில், நம் நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர், அதை ஏற்க முடியாத சிலர், நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இது போன்ற விரக்தியாளர்களிடம் இருந்து, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்கள் மக்களிடையே பொய் தகவல்களை பரப்பி, மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.

பொய் பிரசாரம்

வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கை நோக்கி செல்லும் நேரத்தில் நமக்கு உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல சவால்கள் வருகின்றன. நம் நாட்டின் வளர்ச்சியை பொறுக்க முடியாதவர்கள், வெளியில் இருந்தும் பொய் பிரசாரங்களை செய்துவருகின்றனர்.நாட்டின், 140 கோடி மக்களும் தோளோடு தோள் சேர்ந்தால், இது போன்ற தடைகளை தகர்த்து எறிந்து, நம் இலக்கை நோக்கி வெற்றிகரமாக பயணிக்க முடியும். இதை, மத்திய அரசு மட்டுமே செய்ய முடியாது. அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் மாநிலங்களுக்கு இடையே போட்டி வேண்டும். நாடு முழுதும் உள்ள மூன்று லட்சம் உள்ளாட்சிஅமைப்புகளில் இருந்து, மாவட்ட நிர்வாகம், மாநில அரசுகள் என, அனைவரும் இதில் இணையவேண்டும்.சில சவால்கள், ஆதாரங்களின் தேவை குறைவு போன்றவை இருந்தாலும், மக்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், வளர்ச்சி அடைந்த நாடு என்ற இலக்கு சாத்தியமே.இவ்வாறு அவர் பேசினார்.கடந்த 2014ல் பிரதமராக பதவியேற்றதில் இருந்து, ஒவ்வொரு சுதந்திர தின உரையின்போதும், வித்தியாசமான தலைப்பாகையை பிரதமர் மோடி அணிந்து வருகிறார். அந்த வகையில்,இந்தாண்டு சுதந்திர தின விழாவில், பல வண்ணங்களில் அச்சிடப்பட்ட, 'லேஹரியா' தலைப்பாகையை அவர் அணிந்திருந்தார். ராஜஸ்தானில் புகழ்பெற்றது இந்த வகை தலைப்பாகை. பாலைவனங்களில் காற்றால் ஏற்படும் இயற்கையான அலைகளை உணர்த்தும் வகையில், இந்த தலைப்பாகை அமைந்துள்ளது.

கவனத்தை ஈர்த்த தலைப்பாகை!

செங்கோட்டையில், தொடர்ந்து 11வது முறையாக பிரதமர் மோடி உரையாற்றினார். அதிக முறை உரையாற்றிய பிரதமர்கள் வரிசையில், இதன் வாயிலாக மூன்றாவது இடத்தை அவர் பிடித்தார். நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, 1947 முதல் 1964 வரை தொடர்ந்து, 17 முறை உரையாற்றியுள்ளார். அவரது மகள்இந்திரா, 16 முறை உரையாற்றியுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 2004 முதல் 2014 வரை தொடர்ந்து, 10 முறை உரையாற்றி, மூன்றாவது இடத்தில் இருந்தார். அதை மோடி முறியடித்துள்ளார். இதுவரை, 15 பேர் பிரதமர்களாக இருந்துள்ளனர். அதில், குல்ஜாரிலால் நந்தா, சந்திரசேகர் மட்டுமே செங்கோட்டையில் இருந்து சுதந்திர தின உரையாற்றியதில்லை.

சாதனை படைத்தார்!

இந்திய பிரதமர்களில் மிக நீண்ட நேர சுதந்திரதின உரையாற்றிய பெருமை மோடிக்கு உள்ளது. தன் முந்தைய சாதனையை அவர் நேற்று முறியடித்தார். இதுவரை பிரதமர்களின் மிக நீண்ட உரைகளில் முதல் மூன்றும் மோடியையே சேரும். நேற்று அவர், 98 நிமிடங்கள் உரையாற்றினார். 2016ல் 96 நிமிடங்களும், 2019ல் 92 நிமிடங்களும் உரையாற்றினார். மிகவும் குறைவாக, 2017ல் 56 நிமிடங்கள் உரையாற்றினார். இதற்கு முன், ஜவஹர்லால் நேரு, 1947ல் 72 நிமிடங்களும், ஐ.கே.குஜ்ரால், 1997ல் 71 நிமிடங்களும் பேசியுள்ளனர். மிகவும் குறைவாக, நேரு, 1954லிலும்; இந்திரா, 1966லும் தலா, 14 நிமிடங்கள் மட்டுமே உரையாற்றினர்.

மிக நீண்ட உரை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை