மங்களூரு: ''நேர்மையான அரசியல் என்ற வார்த்தைக்கு, அர்த்தமே இல்லாமல் போய்விட்டது,'' என்று, பா.ஜ., முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா வருத்தம் தெரிவித்து உள்ளார்.தட்சிண கன்னடாவின் புத்துாரில் நேற்று அவர் அளித்த பேட்டி:பா.ஜ.,வில் 30 ஆண்டுகள் பணியாற்ற, எனக்கு வாய்ப்பு கிடைத்தது. முதல்வர், மத்திய அமைச்சர், எம்.பி., பதவி கொடுத்த கட்சி மேலிடத்திற்கு நன்றி. ஒரே குடும்பத்தின் கையில் ஆட்சி, அதிகாரம் சிக்க கூடாது என்று, பிரதமர் மோடி நினைப்பார்.ஆனால் கர்நாடகாவில் மூன்று பேருக்கு மட்டும், அதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் கட்சியை மக்கள் தவறாக, புரிந்து கொள்ள கூடாது.தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக, நான் முன்கூட்டியே அறிவித்தேன். ஆனால் எங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள், என்னிடம் வந்து நீங்கள் மீண்டும் போட்டியிட வேண்டும் என்று கூறினர். இதனால் தேர்தலில் போட்டியிட நினைத்தேன். தற்போது எனக்கு 'சீட்' கிடைக்கவில்லை.முதல்வர், மத்திய அமைச்சர், எம்.பி.,யாக இருந்த போது, மக்களுக்காக சேவை செய்து உள்ளேன். எனது பணி குறித்து யாரும், சான்றிதழ் தர வேண்டியது இல்லை. நேர்மையான அரசியல் என்ற வார்த்தைக்கு, அர்த்தமே இல்லாமல் போய்விட்டது.இது வேதனையாக உள்ளது. இந்த வலியை தேர்தல் முடியும் வரை வெளிப்படுத்த முடியாது. ஒரு குடும்பத்திற்கு எதிராக ஈஸ்வரப்பா என்ன சொன்னார், மற்றவர்கள் என்ன சொன்னார்கள் என்று பேச, நான் விரும்பவில்லை.என் அரசியல் வாழ்க்கையில், கோஷ்டி அரசியல் உருவாக்கியது இல்லை. சட்டசபை தேர்தலின் போது, டில்லியில் ஒரு குழு, கர்நாடகாவில் ஒரு குழு என, எங்கள் கட்சியில் இரண்டு குழுக்கள் இருந்தன. கோஷ்டிபூசல் தான், சட்டசபை தேர்தல் தோல்விக்கு காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.