உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிமாச்சலில் வெளுத்து வாங்கும் மழை மாயமான 45 பேரை தேடும் பணி தீவிரம்

ஹிமாச்சலில் வெளுத்து வாங்கும் மழை மாயமான 45 பேரை தேடும் பணி தீவிரம்

சிம்லா, ஹிமாச்சலில் மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் பலியானோர் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளது. மேலும், மாயமான 45 பேரை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஹிமாச்சல் பிரதேசத்தில் பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இங்குள்ள குலு, மாண்டி, சிம்லா ஆகிய மூன்று மாவட்டங்களில் நேற்று முன்தினம் மேக வெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டியதில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள், சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன; பல்வேறு கிராமங்கள் துண்டிக்கப்பட்டு தனித் தீவுகளாக மாறியுள்ளன.

பியாஸ் நதியில் வெள்ளம்

குலு மாவட்டத்தின் நிர்மாந்த், சைஞ்ச், மலானா, மாண்டி மாவட்டத்தின் ராஜ்பன், பதார் மற்றும் சிம்லா மாவட்டத்தின் சமேஜ் குத், ராம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஐந்து பேர் பலியான நிலையில், நேற்று மேலும் மூவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் காரணமாக, பலி எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளது. இது தவிர, 45 பேர் மாயமாகினர். அவர்களை தேடும் பணியில் ராணுவம், தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினர், இந்தோ - திபெத்திய எல்லை பாதுகாப்புப் படையினர், மாநில போலீசார், ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.மாயமானவர்களை தேட, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பியாஸ் நதி கரை புரண்டு ஓடுவதால், சண்டிகர் - மணாலி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது; நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.இதேபோல், பார்வதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, குலு மாவட்டத்தின் மணிகரண் பகுதியில் செயல்படுத்தப்படும் மலானா நீர்மின் திட்டப்பணி சேதமானது. அப்போது, அந்த பகுதியில் சிக்கியிருந்த 33 பேரை, நேற்று காலை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். இந்நிலையில், ஹிமாச்சலின் மாண்டி, காங்ரா, குலு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, சிம்லா, சாம்பா, சிராமூர் ஆகிய மாவட்டங்களில் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, காங்ரா மாவட்டத்தின் பாலம்பூரில் 21.2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

5,000 பக்தர்கள் மீட்பு

உத்தரகண்டிலும் பலத்த மழை பெய்து வருகிறது. கேதார்நாத்திற்கு புனித யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் 5,000 பேர், பிம்பாலி சவுக்கி என்ற பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கித் தவித்தனர். அவர்கள் சென்ற பாதையில் கனமழை காரணமாக திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு, சாலை துண்டிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினருடன் இந்திய விமானப் படையின் 'சினுாக், எம்.ஐ., 17' ரக ஹெலிகாப்டர்கள் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வரப்பட்ட அவர்களுக்கு, தங்குமிடமும், உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டன. கேதார்நாத் செல்லும் வழியில் பாதைகள் சேதமடைந்துள்ளதால், சார்தாம் யாத்திரை செல்லும் பயணியரின் பதிவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை, உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழைக்கு 14 பேர் உயிரிழந்துள்ளனர்; 10 பேர் காயமடைந்துள்ளதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5,000 பக்தர்கள் மீட்பு

உத்தரகண்டிலும் பலத்த மழை பெய்து வருகிறது. கேதார்நாத்திற்கு புனித யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் 5,000 பேர், பிம்பாலி சவுக்கி என்ற பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கித் தவித்தனர். அவர்கள் சென்ற பாதையில் கனமழை காரணமாக திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு, சாலை துண்டிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினருடன் இந்திய விமானப் படையின் 'சினுாக், எம்.ஐ., 17' ரக ஹெலிகாப்டர்கள் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வரப்பட்ட அவர்களுக்கு, தங்குமிடமும், உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டன. கேதார்நாத் செல்லும் வழியில் பாதைகள் சேதமடைந்துள்ளதால், பக்தர்கள் தங்கள் பயணத்தை ஒத்திவைக்குமாறு உத்தரகண்ட் அரசு வலியுறுத்தியுள்ளது. சார்தாம் யாத்திரை செல்லும் பயணியரின் பதிவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை, உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழைக்கு 14 பேர் உயிரிழந்துள்ளனர்; 10 பேர் காயமடைந்துள்ளதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ