உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் தோல்விக்கு பாண்டியனை விமர்சிப்பது துரதிருஷ்டவசமானது

தேர்தல் தோல்விக்கு பாண்டியனை விமர்சிப்பது துரதிருஷ்டவசமானது

புவனேஸ்வர்: ''ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் வெற்றி பெற வேண்டி சிறப்பாக பணியாற்றிய முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி வி.கே. பாண்டியனை விமர்சிப்பது துரதிரு ஷ்டவசமானது,'' என அந்த மாநில முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். ஒடிசாவின் சட்டசபை மற்றும் லோக்சபா தொகுதிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் மொத்தமுள்ள 21 லோக்சபா தொகுதிகளில் பா.ஜ., 20 இடங்களையும், காங்கிரஸ் ஒரு இடத்தையும் கைப்பற்றியது.

ராஜினாமா

அதேபோல் 147 சட்ட சபை தொகுதிகளில், பா.ஜ., 78 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளம் 51 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும் வென்றது. சுயேச்சை வேட்பாளர்கள் மூன்று பேர் வெற்றி பெற்றனர். சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்ததை அடுத்து, 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நவீன் பட்நாயக் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே, அவருக்கு பக்கபலமாக இருந்து வரும், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான வி.கே.பாண்டியன் தான், தேர்தல் தோல்விக்கு காரணம் என பிஜு ஜனதா தளம் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். இதை அக்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் மறுத்துள்ளார். அவர் கூறியதாவது: நான் ஏற்கனவே கூறியது போல் பாண்டியன் எனது அரசியல் வாரிசு அல்ல; என் வாரிசு குறித்து ஒடிசா மக்கள்தான் தீர்மானிப்பர். ஒரு அதிகாரியாக பாண்டியன் கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக பணியாற்றியுள்ளார். இயற்கை சீற்றங்கள், கொரோனா தொற்று போன்ற பேரிடர் சமயங்களில் அவரின் செயல்பாடுகள் அளப்பரியது. அதிகாரத்தில் இருந்து ஓய்வு பெற்று, கட்சியில் சேர்ந்து உரிய பங்களிப்பை பாண்டியன் அளித்தார். அவர் கட்சியில் எந்த பதவியையும் வகிக்கவில்லை. நேர்மையான நபரான அவரை தேர்தல் தோல்விக்காக விமர்சிப்பது துரதிருஷ்டவசமானது.

என் குடும்பம்

ஒடிசா மக்களின் தீர்ப்பை நான் ஏற்கிறேன். இங்குள்ள 4.5 கோடி மக்கள்தான் என் குடும்பம். அவர்களுக்கு என்னால் முடிந்தவரை சேவை செய்வேன். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, பாண்டியனின் மனைவியும், ஒடிசாவின் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான சுஜாதா, 10ம் வகுப்பு பயிலும் தன் மகள் படிப்பிற்காக ஆறு மாத காலம் விடுமுறை கோரியிருந்த நிலையில், கடந்த 31ம் தேதி முதல் அவருக்கு விடுப்பு வழங்கி, மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை