| ADDED : ஜூன் 08, 2024 04:24 AM
பெங்களூரு : கர்நாடகாவில் ஆளுங்கட்சியாக இருந்தும், லோக்சபா தேர்தலில் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காததால், காங்கிரஸ் மேலிடம் கோபம் அடைந்துள்ளது. கட்சிக்கு எதிராக செயல்பட்ட தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராகிறது.கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு நடக்கிறது. பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருப்பதால், லோக்சபா தேர்தலில் குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என, மாநில தலைவர்களுக்கு கட்டளையிட்டது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட, பலரும் அதிகபட்சம் உழைத்தனர்.வாக்குறுதி திட்டங்களின் உதவியால், 20 முதல் 22 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என, மேலிடம் எதிர்பார்த்தது. ஆனால் வெறும் ஒன்பது தொகுதிகள் மட்டுமே கிடைத்தது. குறிப்பாக பெங்களூரு ரூரல் தொகுதியில், சுரேஷ் தோற்றதை மேலிடத்தால் ஜீரணிக்க முடியவில்லை. தம்பி தோல்வி அடைந்ததால், துணை முதல்வர் சிவகுமார் வருத்தத்தில் இருக்கிறார்.சில தொகுதிகளில் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தும், தலைவர்களின், 'உள்குத்து' வேலையால் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இது மேலிடத்தின் கவனத்துக்கு சென்றுள்ளது. கட்சிக்கு துரோகம் செய்த தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காங்., மேலிடம் தயாராகிறது.இது தொடர்பாக, ஆலோசனை நடத்த கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, நேற்று பெங்களூரு வந்துள்ளார். முக்கிய தலைவர்களுடன், தனியார் ஹோட்டலில் ஆலோசனை நடத்தினார். கட்சியின் தோல்விக்கு என்ன காரணம், யார், யார் கட்சிக்கு துரோகம் செய்தனர் என்பது குறித்து தகவல் கேட்டறிந்தார்.மாநில தலைவர்களின் கருத்துகளை கேட்டறிந்த பின், டில்லிக்கு சென்று மேலிடத்துக்கு அறிக்கை அளிப்பார். அதன்பின் கட்சியின் பின்னடைவு ஏற்பட காரணமாக இருந்தவர்கள் மீது, மேலிடம் நடவடிக்கை எடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.