ஹைதராபாத், ராஜ்யசபா இடைத்தேர்தலில் தெலுங்கானாவில் இருந்து போட்டியிட, காங்., மூத்த தலைவரும், வழக்கறிஞருமான அபிஷேக் சிங்வி, 65, வேட்புமனு தாக்கல் செய்தார். தெலுங்கானா, ஒடிசா உட்பட ஒன்பது மாநிலங்களில், காலியாக உள்ள 12 ராஜ்யசபா இடங்களுக்கு, அடுத்த மாதம் 3ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.காங்., ஆளும் தெலுங்கானாவில், ஒரேயொரு ராஜ்யசபா இடம் காலியாக உள்ளது.இங்கு நடக்கவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிட, காங்., மூத்த தலைவரும், வழக்கறிஞருமான அபிஷேக் சிங்வி, ஹைதராபாதில் உள்ள மாநில சட்டசபையில், நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.மொத்தம் 119 எம்.எல்.ஏ.,க்களை உடைய தெலுங்கானா சட்டசபையில், ஆளும் காங்கிரசுக்கு 65 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.அபிஷேக் சிங்வி, ராஜஸ்தானில் இருந்து இருமுறையும், மேற்கு வங்கத்தில் இருந்து ஒருமுறையும், ராஜ்யசபாவுக்கு ஏற்கனவே தேர்வாகி உள்ளார்.தற்போது அவர், நான்காவது முறையாக ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.கடந்த பிப்ரவரியில் ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அபிஷேக் சிங்வி போட்டியிட்டார்.அங்கு காங்., வேட்பாளர் வெற்றி பெற தேவையான உறுப்பினர்கள் இருந்தும், அந்த கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சிலர் கட்சி மாறி ஓட்டளித்ததால், சிங்வி தோல்வி அடைந்தார்.இதையடுத்து தற்போது தெலுங்கானாவில் களம் இறங்கி உள்ளார்.