இந்துார் : மத்திய பிரதேசத்தின் இந்துார் லோக்சபா தொகுதியில், பா.ஜ., சார்பில் களமிறக்கப்பட்ட சங்கர் லால்வாணி, 10 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் வாயிலாக, இந்த தேர்தலில், அதிக ஓட்டு வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள இந்துார் தொகுதியில், மே 13ல் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. தேர்தலுக்கு முன், இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்சய் கன்டி பாம் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு பரிசீலனையின் போது, திடீரென தன் வேட்பு மனுவை வாபஸ் பெற்ற அவர், பா.ஜ., பக்கம் தாவினார்.அதேநேரத்தில், காங்கிரஸ் மாற்று வேட்பாளர்களின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இதனால், காங்கிரஸ் சார்பில் அந்த தொகுதியில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டது. இது, பா.ஜ.,வுக்கு சாதகமாக அமைந்தது. அதனால், யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை என்பதை தெரிவிக்கும் வகையில் நோட்டாவுக்கு ஓட்டளிக்குமாறு, அத்தொகுதி வாக்காளர்களுக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. இந்நிலையில், நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையின் முடிவில், பா.ஜ., வேட்பாளர் சங்கர் லால்வாணி, 12,26,751 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அடுத்ததாக, நோட்டாவுக்கு 2,18,674 ஓட்டுகள் கிடைத்ததுடன், இரண்டாவது இடத்தையும் பிடித்தது. இதன் காரணமாக, பா.ஜ., வேட்பாளர் சங்கர் லால்வாணி 10,08,077 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். இத்தொகுதியில் போட்டியிட்ட மற்ற, 13 வேட்பாளர்களும் டிபாசிட் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.கடந்த, 2019ல் பீஹாரின் கோபால்கஞ்ச் லோக்சபா தொகுதியில் நோட்டாவுக்கு 51,660 ஓட்டுகள் பதிவானதே சாதனையாக இருந்தது. தற்போது, இந்துாரில் 2,18,674 ஓட்டுகள் பதிவாகி உள்ளதையடுத்து, முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன், 2014ல் நடந்த லோக்சபா தேர்தலின் போது, தமிழகத்தின் நீலகிரி தொகுதியில் 46,559 ஓட்டுகள் நோட்டாவுக்கு பதிவானது குறிப்பிடத்தக்கது.