பல்லாரி மாவட்டம், கூட்லகி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பட்டுக்கூடு வளர்ப்புக்கு பெயர் பெற்றது. பெரும்பாலான விவசாயிகள் பட்டுக்கூடு வளர்ப்பில் ஈடுபட்டு லாபம் ஈட்டி வருகின்றனர். ஆனால் ஒரு விவசாயி மட்டும் சற்று மாற்றி யோசித்து, டிராகன் பழ விளைச்சலில் அசத்தி வருகிறார்.கூட்லகி அருகே நிம்பலகெரே கிராமத்தில் வசிப்பவர் மஞ்சுநாத். இவருக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் தோட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, டிராகன் பழ கன்றுகளை நட்டு வளர்க்க ஆரம்பித்தார். தற்போது பழங்கள் நன்கு விளைந்து உள்ள நிலையில், சந்தையில் அதிக விலைக்கு விற்பனை ஆகிறது. சீதாப்பழங்கள் மூலமும் லாபம் ஈட்டி வருகிறார். மனைவி கூறியதால்...
இதுகுறித்து மஞ்சுநாத் பெருமையுடன் கூறியதாவது:எனது தோட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மக்கா சோளம் பயிரிட்டேன். தண்ணீர் பற்றாக்குறை, வேலை செய்ய ஆள் இல்லாதால் மக்கா சோள விளைச்சலில், அதிக லாபம் ஈட்ட முடியவில்லை. அப்போது தான், எனது மனைவி ஜெயம்மா என்கிற நிர்மலா, டிராகன், சீதாப்பழங்களை வளர்க்கலாம் என்று ஐடியா கொடுத்தார். முதலில் தயக்கமாக இருந்தது. ஆனாலும் மனைவி கூறியதால் ஏற்று கொண்டேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, மஹாராஷ்டிராவில் இருந்து 2,500 டிராகன் பழம் மற்றும் 500 சீத்தாப்பழ கன்றுகளை வாங்கி வந்தோம்.தேவையான தண்ணீர், இயற்கை உரங்களை சரியான அளவில் போட்டு, வளர்க்க ஆரம்பித்தோம். முதல் ஆண்டில் 800 கிலோ டிராகன் பழம் மட்டுமே கிடைத்தது. இரண்டு, மூன்றாம் ஆண்டில் 4 டன் அதாவது 4,000 கிலோ பழங்கள் கிடைத்தன. கடந்த ஆண்டு 25,000 டன் பழங்கள் கிடைத்தன. சொட்டு நீர் பாசனம்
ஒரு டிராகன் பழம் 70 ரூபாய் முதல் 80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. பல்லாரி, தாவணகெரே, மைசூரு உட்பட மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்தும், ஆந்திராவில் இருந்து, வியாபாரிகள் எங்களிடம் வந்து, பழம் வாங்கி செல்கின்றனர். எங்கள் தோட்டத்தில் மீதமுள்ள சிறிய நிலத்தில் மிளகாய், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளையும் பயிரிட்டு வளர்க்கிறோம். பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச, தோட்டத்தில் இரண்டு கிணறுகள் உள்ளன. சொட்டுநீர் பாசன முறையில், விவசாயம் செய்கிறேன். விவசாயம் மட்டுமே எப்போதும், நமது காலை வாராத தொழில் என்று, உறுதியாக நம்புகிறேன். டிராகன் பழ விளைச்சலில் நானும், என் மனைவியும் சேர்த்து அசத்துகிறோம் என்று, ஊர்காரர்கள் சொல்லும்போது மகிழ்ச்சியாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்- நமது நிருபர் -.