புதுடில்லி: 2013ல் இருந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஆம் ஆத்மி கூறுகிறது என பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா குற்றம் சாட்டியுள்ளார்.ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க பா.ஜ.,வினர் பேரம் பேசுவதாக, கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார். பா.ஜ., மீது குற்றஞ்சாட்டிய டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அக்கட்சி புகார் அளித்த நிலையில், அவரிடம் போலீசார் நோட்டீஸ் அளித்தனர். இந்த குற்றச்சாட்டில், டில்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷிக்கு குற்றப்பிரிவுத் துறை போலீசார் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.அதிஷி குற்றச்சாட்டு
இது குறித்து அமைச்சர் அதிஷி, ''எனக்கும், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் வழங்கப்பட்ட நோட்டீசில், எப்.ஐ.ஆர்., பற்றி எந்த தகவலும் இல்லை. மேலும், இந்திய தண்டனை சட்டங்களின் எந்த பிரிவும் அதில் குறிப்பிடவில்லை. அரசியல் முதலாளிகள் நடத்தும் இது போன்ற நாடகங்களில், போலீசார் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்,'' எனக் கூறியிருந்தார்.ஆதாரமற்ற குற்றச்சாட்டு
இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் ஷேசாத் பூனவல்லா கூறியதாவது: அரவிந்த் கெஜ்ரிவால் சொல்வதை யாரும் நம்ப முடியாது. ஆம் ஆத்மி கட்சியினர் 2013ம் ஆண்டு முதல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகின்றனர். குற்றச்சாட்டுகளுக்கு போலீசார் ஆதாரம் கேட்டு உங்கள் வீட்டு வாசலுக்கு வரும்போது, அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.