உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  அமலாக்கத்துறை சம்மன் மீண்டும் நழுவினார் அனில்

 அமலாக்கத்துறை சம்மன் மீண்டும் நழுவினார் அனில்

புதுடில்லி: 'ரிலையன்ஸ்' குழும தலைவர் முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, 66, வங்கி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருக்கு சொந்தமான 7,500 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக் களை அமலாக்கத்துறை முடக்கியது. அவருக்கு சொந்தமான, 'ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்' நிறுவனத்தில் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர், ஜெய்ப்பூர் - ரீங்கஸ் நெடுஞ்சாலை திட்டத்தில் இருந்து, 40 கோடி ரூபாயை அந்நிறுவனம் கையாடல் செய்ததையும் கண்டுபிடித்தனர். இந்த பணம், குஜராத்தின் சூரத்தில் உள்ள போலி நிறுவனங்கள் மூலம், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய்க்கு பரிமாற்றம் செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இது போல, சர்வதேச ஹவாலா நெட்வொர்க் மூலம், 600 கோடி ரூபாய் பரிமாற்றம் நடந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. ஜெய்ப்பூர் - ரீங்கஸ் நெடுஞ்சாலை திட்டம் தொடர்பான அன்னிய செலாவணி வழக்கில், நவ., 14ல் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இதை புறக்கணித்த அவர், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் ஆஜராக அனுமதி கோரினார். அமலாக்கத் துறை மறுத்தது. நவ., 17ல் நேரில் ஆஜராகும்படி இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியது. ஆனால், அனில் அம்பானி, இரண்டாவது முறையாக நேற்றும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி