உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பல்வேறு திட்டங்களுக்கு பகவத் கீதை தான் அடிப்படை: பிரதமர் மோடி

பல்வேறு திட்டங்களுக்கு பகவத் கீதை தான் அடிப்படை: பிரதமர் மோடி

புதுடில்லி: '' பல்வேறு திட்டங்களுக்கும் பகவத் கீதை தான் அடிப்படை '' என உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் மடத்தில் வழிபாடு நடத்திய பிறகு பிரதமர் மோடி கூறினார்.கர்நாடகா மாநிலம் உடுப்பிக்கு இன்று (நவ.,28) வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உடுப்பி டவுனில் உள்ள பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மடத்தில் நடந்த லட்ச காண்ட கீதை பாராயண நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.தொடர்ந்து, கோவில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள சுவர்ண தீர்த்த மண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஸ்ரீபுட்டிகே மடத்தின் தலைவர் ஸ்ரீசுகுணேந்திரதீர்த்த சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார்.

வழிகாட்டி

தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:மூன்று நாட்களுக்கு முன்பு, கீதை பிறந்த குருசேத்திரத்தின் புனித பூமியில் இருந்தேன். இன்று, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் ஜகத்குரு ஸ்ரீமத்வாச்சாரியார் ஆகியோரின் இந்த ஆசிர்வதிக்கப்பட்ட பூமிக்கு வருவது எனக்கு திருப்தியை தருகிறது. இந்த சந்தர்ப்பத்தில் ஒரு லட்சம் பேர் ஒன்றாக பகவத் கீதையின் ஸ்லோகங்களை உச்சரித்த போது, உலகம் எங்கும் உள்ள மக்கள் இந்தியாவின் ஆழ்ந்த ஆன்மீக பாரம்பரியத்தைக் கண்டனர். ஐந்து தசாப்தங்களுக்கு முன்னரே, உடுப்பி புதிய மாதிரியை முன்வைத்தது. இது தேசிய கொள்கைகளுக்கு வழிகாட்டுகிறது.உடுப்பி தேசிய கொள்கைகளுக்கு வழிகாட்டியது. குஜராத்துக்கும் உடுப்பிக்கும் தொடர்பு உண்டு.பொது நலனுக்காக பாடுபடுமாறு கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்குச் சொல்கிறார். ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற பகவத் கீதையின் செய்தியே பல்வேறு திட்ட கொள்கைகளுக்கு அடிப்படையாகும்.

புதிய மாதிரி

இந்த நகருக்கு வருவது மற்றொரு காரணத்தினால் எனக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது. ஜன சங்கத்திற்கும், பாஜவின் சிறந்த நிர்வாக மாதிரிக்கும் உடுப்பி நகரமானது கர்மபூமியாக திகழ்கிறது. 1968 ம் ஆண்டில் ஜன சங்கத்தின் தலைவர் விஎஸ் ஆச்சார்யாவை, நகராட்சி கவுன்சில் உறுப்பினராக உடுப்பி மக்கள் தேர்வு செய்தனர். அதன் மூலம் நிர்வாகத்துக்கான புதிய மாதிரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ராமஜென்ம பூமி இயக்கத்துக்கு உடுப்பி மக்களின் பங்களிப்பை ஒட்டு மொத்த நாட்டு மக்களும் அறிவார்கள். அயோத்தி ராமர் கோவிலில் கொடியேற்று நிகழ்வை ஸ்ரீவிஸ்வேசே தீர்த்த சுவாமிகள் வழிநடத்தினார்.

சுதர்சன சக்கர இயக்கம்

செங்கோட்டையில் இருந்து சுதர்சன சக்கர இயக்கத்தை அறிவித்தேன். இந்த திட்டம் என்பது பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட நாட்டின் முக்கிய இடங்களை சுற்றி, எதிரிகளின் தாக்குதலில் இருந்து காக்கும் பாதுகாப்பு கவசத்தை உருவாக்குவதாகும்.எதிரிகள் அத்துமீறலில் ஈடுபட்டால் ஒரு எதிரி ஆக்கிரமிப்பைக் காட்டத் துணிந்தால் நமது சுதர்சன சக்கரம் அதை அழித்துவிடும்.

ஆப்பரேஷன் சிந்தூர் நடந்த போது, நமது உறுதிப்பாட்டை தேசம் பார்த்தது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கர்நாடகாவைச் சேர்ந்த சகோதரர் மற்றும் சகோதரிகள் பாதிக்கப்பட்டனர். பயங்கரவாத தாக்குதலின் போது முந்தைய அரசுகள் சோம்பேறித்தனமாக அமர்ந்திருந்தன. புதிய இந்தியா தனது மக்களைப் பாதுகாக்க தலைவணங்கவோ தயங்கவோ இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

ரோடு ஷோ

முன்னதாக, உடுப்பி டவுனில் உள்ள நாராயணகுரு சதுக்கத்தில் இருந்து கல்சங்கா சந்திப்பு வரை பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் நின்று பிரதமருக்கு, மக்கள், கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை