பெங்களூரு : ஏற்கனவே இரண்டு முறை, கர்நாடகாவுக்கு வருகை தந்து, கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். இது தொண்டர்களை உற்சாகப்படுத்தியது. வரும் நாட்களில் மீண்டும் அவரை அழைத்து வர மாநில பா.ஜ., திட்டமிட்டுள்ளது. பிரதமருடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச தலைவர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட, முக்கிய தலைவர்களும் கர்நாடகாவுக்கு வர உள்ளனர்.லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நெருங்குகிறது. பா.ஜ., ஜெட் வேகத்தில் தயாராகி வருகிறது. கொளுத்தும் வெயிலைப் பொருட்படுத்தாமல், தொகுதியை சுற்றி வந்து கட்சி வேட்பாளர்கள் பிரசாரம் செய்கின்றனர். கோவில், மடங்கள், வழிபாடுத் தலங்களுக்குச் சென்று, தங்கள் வெற்றிக்காக வேண்டுகின்றனர்.ஷிவமொகா, தாவணகெரே, ஹாவேரி உள்ளிட்ட சில தொகுதிகளில் அதிருப்தியாளர்களை சமாளிக்கவே, வேட்பாளர்களுக்கு பெரும்பாடாக உள்ளது. சாதகமான சூழ்நிலை
மாநில தலைவர் விஜயேந்திரா, தன் தந்தையும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவின் உதவியுடன், அதிருப்தியை கட்டுப்படுத்தி கட்சிக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கிறார்.மாநிலத்தில் ஏப்ரல் 26ல் முதற்கட்ட ஓட்டுப் பதிவு நடக்கவுள்ளது. எனவே பிரசாரத்தை பா.ஜ., தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக மாநில தலைவர் விஜயேந்திரா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் ஆகியோர் தலைமையில், பிரசாரக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன.அதே போன்று மேலிட தலைவர்கள் அடங்கிய குழுவும் அமைக்கப்படுகிறது. இந்த குழுக்கள் தினமும் இரண்டு, மூன்று லோக்சபா தொகுதிகளில் பொதுக் கூட்டம் நடத்த உள்ளது.ஏற்கனவே இரண்டு முறை கர்நாடகாவுக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் மாநிலத்துக்கு வருகை தருகிறார். அவருடன் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தேசிய தலைவர் நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் பிரசாரத்தில் பங்கேற்க உள்ளனர்.மேலிட தலைவர்கள் எப்போது, எந்தெந்த தொகுதிகளில் பிரசாரம் செய்ய வேண்டும், பொதுக் கூட்டங்களை எந்த வகையில் ஏற்பாடு செய்வது, இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து, மாநில பா.ஜ., அட்டவணை தயாரிக்கிறது.மேலிட தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களில், விஜயேந்திரா, அசோக் என, மாநிலத்தின் மற்ற தலைவர்கள் பங்கேற்கமாட்டார்கள். இவர்கள் வேறு தொகுதிகளில் பிரசாரக் கூட்டங்கள் நடத்துவர். அதே வேளையில் மேலிட தலைவர்கள் பங்கேற்கும் அனைத்து பொதுக் கூட்டங்களிலும், எடியூரப்பா இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது.வரும் நாட்களில் பா.ஜ.,வின் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும். மத்திய, மாநில தலைவர்களின் பேரணி, பொதுக் கூட்டம், ஊர்வலம் என, தேர்தல் திருவிழா களைகட்டும். முக்கிய தலைவர்களின் வருகைக்காக, தொண்டர்களும் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.இதுகுறித்து மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:பிரதமர் மோடி ஏற்கனவே கலபுரகி, ஷிவமொகாவுக்கு வந்து, லோக்சபா தேர்தல் பிரசாரத்தைத் துவக்கிவைத்தார். மேலும் நான்கு முறை அவர் மாநிலத்துக்கு வருகை தருவார்.அதே போன்று கட்சியின் தேசிய தலைவர் நட்டா நான்கு முறையும், அமித் ஷா ஆறு முறையும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நான்கு முறையும் கர்நாடகாவுக்கு வருகை தர உள்ளனர்.பிரசாரம் தொடர்பான குழுவினர், அந்தந்த தொகுதிகளின் பிரச்னைகள் குறித்து தகவல் சேகரிப்பர். பிரதமரின் பொதுக் கூட்டங்களின் ஆரம்பத்தில், கன்னடத்தில் சில பொன்மொழிகளை குறிப்பிட திட்டமிட்டுள்ளோம். மெகா பேரணி
மேலிட தலைவர்கள் வருகை தருவதால், தொண்டர்களின் உற்சாகம் அதிகரிக்கும். இது கட்சியின் பலத்தை அதிகரிக்கும். அதிக தொகுதிகளை கைப்பற்ற உதவியாக இருக்கும். மாநிலம் முழுதும் குறைந்தபட்சம் 70 பொதுக் கூட்டங்கள் நடத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளது. வாக்காளர்களை சென்றடைய மெகா பேரணி நடத்தவும் தயாராகிறோம்.முதற்கட்ட தேர்தல் நடக்கும் தென் மாவட்டங்களுக்கு முதலில் பா.ஜ., பிரசார குழுவினர் முக்கியத்துவம் அளிப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.