உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இடிக்கப்படுகிறது பழங்கால பவுரிங் மருத்துவமனை 10 மாடிகளில் புதிய கட்டடம் கட்ட அரசு முடிவு

இடிக்கப்படுகிறது பழங்கால பவுரிங் மருத்துவமனை 10 மாடிகளில் புதிய கட்டடம் கட்ட அரசு முடிவு

பெங்களூரு: பெங்களூரின், மிகவும் பழைய மருத்துவமனையான பவுரிங் மருத்துவமனை, இன்னும் சில நாட்களில் இடிக்கப்படவுள்ளது. இதே இடத்தில் 10 மாடிகள் கொண்ட புதிய கட்டடம் கட்ட, அரசு முடிவு செய்துள்ளது.இது குறித்து, மருத்துவ கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:பவுரிங் மற்றும் லேடி கர்ஜன் மருத்துவமனை, பெங்களூரின் பழைய மருத்துவமனைகளில் ஒன்றாகும். இந்த மருத்துவமனையை இடித்துவிட்டு, இந்த இடத்தில் 212.23 கோடி ரூபாய் செலவில், புதிய மருத்துவமனை கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. 10 மாடிகள் கொண்ட கட்டடத்தில், 500 படுக்கைகள் இருக்கும்.புதிய மருத்துவமைன கட்ட, மருத்துவ கல்வித்துறை டெண்டர் கோரியுள்ளது. பணிகளை முடிக்க இரண்டு ஆண்டுகள், காலக்கெடு விதிக்கப்படும். 2027ல் புதிய மருத்துவமனை, நோயாளிகளின் சிகிச்சைக்கு தயாராகும். கட்டட பணிகள் முடியும் வரை, பவுரிங் மருத்துவமனை அருகில் உள்ள மற்றொரு கட்டடத்துக்கு இடம் மாற்றி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.மொத்தம் 10 மாடிகள் கொண்ட மருத்துவமனை கட்டடம், மூன்று கட்டங்களில் கட்டப்படும். முதல் கட்டத்தில் தரை தளம், முதல் மாடி, இரண்டாவது மாடிகள் கட்டப்படும். இதில் வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை அறைகள் இருக்கும்.இரண்டாம் கட்டத்தில், மூன்றாவது மாடி முதல், ஆறாவது மாடி வரை கட்டப்படும். இங்கும் வெளி நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை அறைகள் இருக்கும். மூன்றாவது கட்டத்தில், ஏழாவது மாடி முதல், 10வது மாடி வரை கட்டப்படும்.இந்த மாடிகளில், 360 படுக்கைகள் கொண்ட வார்டு கட்டப்படும். பெங்களூரு வரலாற்றில், பவுரிங் மருத்துவமனையும், நினைவில் இருக்க கூடியது. எனவே பவுரிங் மருத்துவமனையின் சிறிதான கட்டத்தை அப்படியே வைத்துவிட்டு, மற்ற கட்டடங்கள் இடித்து, புதிதாக கட்டப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.வரலாற்று வல்லுனர் சுரேஷ் மூனா கூறியதாவது:மருத்துவமனை மிகவும் பழையது என்பதால், சிதிலமடைந்துள்ளது. புதிய கட்டடம் கட்டினால், நோயாளிகளுக்கு மேலும் சிறப்பான சிகிச்சை கிடைக்கும். இந்த மருத்துவமனை வரலாற்று பிரசித்தி பெற்றது. இதன் அடையாளத்தை தக்க வைத்துக்கொண்டு, புதிய கட்டடம் கட்டப்படும். வருங்கால சந்ததியினருக்கு மருத்துவமனையின் வரலாறு தெரிய வேண்டும்.புதிய கட்டடத்தில், பழைய கட்டடத்தின் போட்டோக்கள் வைப்பதன் மூலம், மருத்துவமனை வரலாற்றை அறிமுகம் செய்ய வேண்டும். இத்தகைய சம்பிரதாயம் ஐரோப்பிய நாடுகளில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.150 ஆண்டு வரலாறுசிவாஜிநகரில் உள்ள பவுரிங் மற்றும் லேடி கர்ஜன் மருத்துவமனை, பெங்களூரின் முக்கியமான பொது மருத்துவமனைகளில் ஒன்றாகும். 1866ல் மைசூரு கமிஷனராக இருந்த லெவின் பெந்தான் பவுரிங் என்பவர், பவுரிங் மருத்துவமனையை கட்டும் பணிகளை துவக்கினார்.பாரிசில் உள்ள லாரிபோசி கட்டடத்தின் வரைபடத்தை அடிப்படையாக வைத்து, பவுரிங் மருத்துவமனை கட்டப்பட்டது. 1868ல் கட்டுமான பணிகள் முடிந்து செயல்பட துவங்கியது. மைசூரின் அன்றைய கமிஷனராக இருந்த, 'பவுரிங்' பெயரே, மருத்துவமனைக்கு வைக்கப்பட்டது.கடந்த 1900ல், பெண்களுக்கு மகளிர் டாக்டர்களே, சிகிச்சை அளிக்கவும், பிரிட்டிஷ் பெண்களுக்கு மருத்துவ கல்வி அளிக்கவும், பழைய கட்டடத்தை இடித்து, புதிய அறைகள் சேர்த்து புதுப்பிக்கப்பட்டது. இதை லேடி கர்ஜன் திறந்து வைத்தார். இவர் அன்றைய இந்திய வைஸ்ராயாக இருந்த, லார்டு ஜார்ஜ் சதாநியல் கர்ஜனின் மனைவி.ஆரம்பத்தில் இது 104 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக இருந்தது. மைசூரு மாநிலத்தை சேர்ந்த மருத்துவ கல்லுாரியாக இருந்தது. 1884ல் மருத்துவமனை ராணுவ நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 1890 வரை பவுரிங் மருத்துவமனை மட்டுமே, பெங்களூரின் ஒரே அரசு மருத்துவமனையாக இருந்தது. சுதந்திரத்துக்கு பின், இந்த மருத்துவமனையில் வெறும் கதிர் வீச்சு பரிசோதனை உட்பட, சில மருத்துவ பரிசோதனைகள் மட்டும் நடத்தப்பட்டன. 1947ல் மைசூரு அரசு, தொண்டை வலி பிரிவு, குழந்தைகள் பிரிவு, 40 படுக்கைகள் கொண்ட அறுவை சிகிச்சை பிரிவுகளை கட்டியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி