உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  கூர்நோக்கு நீதி வாரியங்களில் தேங்கிய வழக்குகள்; நீதி கிடைக்காமல் 50,000 குழந்தைகள் பரிதவிப்பு

 கூர்நோக்கு நீதி வாரியங்களில் தேங்கிய வழக்குகள்; நீதி கிடைக்காமல் 50,000 குழந்தைகள் பரிதவிப்பு

புதுடில்லி: நாடு முழுதும் உள்ள 362 கூர்நோக்கு நீதி வாரியங்களில் பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் முடிக்கப்படாமல் தேங்கி கிடப்பதால், 50,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நீதி கிடைப்பதில் தாமதம் நீடிக்கிறது. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சிறு வயதிலேயே குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர், சிறுமியர் கூர்நோக்கு இல்லத்தில் வைத்து பராமரிக்கப் படுகின்றனர். இவர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்கும் வகையில் கூர்நோக்கு நீதிச் சட்டம், 10 ஆண்டுகளுக்கு முன் அமலுக்கு வந்தது. எனினும், நீதிபதிகள் பற்றாக்குறை, விசாரணைக்கான தரவுகளை சேகரிப்பதில் மெத்தனம் மற்றும் மாநில அளவிலான ஏற்றத்தாழ்வுகள் ஆகிய காரணங்களால் நீதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, 'இந்தியா நீதி அறிக்கை' என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஆய்வு நடத்தி அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை: நாடு முழுதும் உள்ள 362 கூர்நோக்கு நீதி வாரியங்களில், 2023 அக்., 31ம் தேதி வரை, 1,00,904 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில், 55 சதவீத வழக்குகள் தீர்க்கப்படாமல் அப்படியே நிலுவையில் உள்ளன. இதில் அதிகபட்சமாக ஒடிஷாவில், 83 சதவீத வழக்குகளும், குறைந்தபட்சமாக கர்நாடகாவில், 35 சதவீத வழக்குகளும் தீர்க்கப்படவில்லை. நாடு முழுதும், 765 மாவட்டங்களில் கூர்நோக்கு நீதி வாரியங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், நான்கில் ஒரு வாரியம் முழு அமர்வு இல்லாமல் செயல்படுகிறது. சராசரியாக ஒவ்வொரு கூர்நோக்கு வாரியத் திலும், 154 வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட கூர்நோக்கு நீதி வாரியங்களில் சட்ட ஆலோசனை வழங்கும் சேவை மையங்கள் இல்லை. ஜம்மு - காஷ்மீர் உள்பட 15 மாநிலங்களில், 18 வயதுக்கு மேற்பட்டோரை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு போதிய இல்லங்கள் இல்லை. 292 மாவட்டங்களில், சிறுமியருக்கு என பிரத்யேகமாக இயங்கும் கூர்நோக்கு இல்லங்களின் எண்ணிக்கை, வெறும் 40 ஆக மட்டுமே உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை