| ADDED : ஜன 30, 2024 08:08 AM
சித்ரதுர்கா : மாநாட்டுக்காக தயாரிக்கப்பட்ட, டன் கணக்கிலான சிக்கன் பிரியாணியை, மண்ணில் கொட்டி வீணாக்கிய வீடியோ பரவியுள்ளது. பலரும் கொதிப்படைந்துள்ளனர்.சித்ரதுர்கா புறநகரில் மாதர சென்னய்யா பீடத்தின் பின்பகுதியில், பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் கூட்டமைப்பு, ஒடுக்கப்பட்டோர் விழிப்புணர்வு மாநாடு நேற்று முன் தினம் நடந்தது. இதில் முதல்வர் சித்தராமையா உட்பட, பலர் பங்கேற்றிருந்தனர்.மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து, ஐந்து லட்சம் பேர் மாநாட்டுக்கு வரலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. சைவம் சாப்பிடுவோருக்காக காய்கறி புலாவ், தயிர் சாதம்; அசைவ பிரியர்களுக்கு சிக்கன் பிரியாணி தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவில் மக்கள் வரவில்லை.டன் கணக்கில் சிக்கன் பிரியாணி, காய்கறி புலாவ் மிச்சமானது. இந்த உணவை, மண்ணில் கொட்டி வீணாக்கியுள்ளனர். நாட்டில் பலரும், ஒரு வேளை உணவு கிடைக்குமா என, பசியோடு அலைவதை பார்த்திருக்கிறோம். பெங்களூரு போன்ற மாநகரங்களில், எத்தனையோ மக்கள் இரண்டு வேளை உணவு சாப்பிட்டால், மற்றொரு வேளை பட்டினி கிடக்கின்றனர். ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களிலும், மக்கள் உணவு கிடைக்காமல் தவிப்பதுண்டு.சுற்றுப்புற கிராமத்தினருக்கு வினியோகித்திருக்கலாம். ஆதரவற்றோர் மையங்கள், முதியோர் இல்லங்கள், அரசு சார்ந்த மாணவர் விடுதிகளுக்கு அனுப்பியிருக்கலாம் அல்லது பிச்சைக்காரர்களை அழைத்து, உணவை அளித்திருக்கலாம்.வீணாக்கப்பட்ட உணவு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. பலரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை கண்டித்துள்ளனர்.