பெங்களூரு: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகாவின் சில நகரங்கள் காவி மயமாக மாறின.பெங்களூரின் பல்வேறு இடங்களில், ஹிந்து அமைப்புகள், காவி வர்ணம் தீட்டியுள்ளன. பல வீடுகள், கடைகள் முன் ராமர், சீதை, லட்சுமணன், ஹனுமன் உருவங்கள் உள்ள காவி கொடிகள் வைக்கப்பட்டிருந்தன. 500 ஆண்டுகளுக்கு பின், தன் ஜென்ம பூமிக்கு ராமர் வருவதை வரவேற்கும் போஸ்டர்கள், நகரின் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன.பெருமாள் கோவில்கள், ராமர், ஆஞ்சனேயர் கோவில்களில் நேற்று அதிகாலையில் இருந்தே, பூஜைகள் துவங்கின. பஜனைகள், கீர்த்தனைகள் நடந்தன. பக்தர்கள் பெருமளவில் வந்தனர். ராஜாஜி நகரின் ராமர் கோவில், மல்லேஸ்வரம், பசவனகுடி ராமர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.தர்மராஜா கோவில் வீதியில் உள்ள பழமையான ராமர் கோவிலில் பக்தர்களை அதிகமாக காண முடிந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.பெங்களூரு, மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலகம் அலங்கார விளக்குகள், பேனர்கள், போஸ்டர்கள், கொடிகள் வைக்கப்பட்டிருந்தன.மஹாலட்சுமி லே - அவுட்டின், ராணி அப்பக்கா மைதானத்தில் நடந்த ஸ்ரீராம தாரக மஹாயாகம், கலஷாபிஷேகம் நடந்தது. இதில் மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா உட்பட, பலர் பங்கேற்றனர்.பெங்களூரு மட்டுமின்றி, ஹூப்பள்ளி, தார்வாட், பெலகாவி, பீதர், விஜயபுரா உட்பட, அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு வழிபாடுகள், கொண்டாட்டங்கள் நடந்தன. குறிப்பாக மங்களூரு, உடுப்பி, சிக்கமகளூரு, பல்லாரி, மைசூரு, கோலார், துமகூரு, கதக், கொப்பால், தாவணகெரே, ஹாவேரி நகரங்கள் காவி மயமாக மாறியிருந்தன.