உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலையில் அரவணை டின்களுக்கு தட்டுப்பாடு வழியில் தடுக்கப்பட்டதால் பக்தர்கள் மறியல்

சபரிமலையில் அரவணை டின்களுக்கு தட்டுப்பாடு வழியில் தடுக்கப்பட்டதால் பக்தர்கள் மறியல்

சபரிமலை:சபரிமலையில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் அரவணை டின்னுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பிரசாத வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வழிகளில் பக்தர்கள் மீண்டும் தடுக்கப்படுவதால் ரோடு மறியல் துவங்கியுள்ளது.மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை டிச.30 மாலை திறக்கப்பட்டது. டிச. 31 முதல் நெய்யபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகள் நடக்கிறது. நடை திறந்த நாள் முதல் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் 18 படி ஏறுவதற்கான கியூ எல்லா நாட்களிலும் சரங்குத்தியையும் கடந்து மர கூட்டம் வரை காணப்படுகிறது.நேற்று முன்தினம் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் நிலக்கல் வரும் பாதைகளில் வாகனங்களை தடுத்து நிறுத்த சன்னிதானம் போலீசில் இருந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. இதனால் முக்கட- ---இடமண், -பெருநாடு -சபரிமலை பாதையில் கண்ணம்பள்ளியில் பக்தர்களின் வாகனங்கள் தடுக்கப்பட்டது.

சாலைமறியல்

இந்த இடங்களில் கடைகளோ அல்லது உணவு தயாரிப்பதற்கான வசதிகள் இல்லாததால் பக்தர்கள் தங்களை தொடர்ந்து செல்ல அனுமதி கோரியும் போலீசார் மறுத்தனர். இதற்கிடையில் ரான்னி பகுதியிலிருந்து வந்த வாகனங்கள் அத்திக்கயம் வழியாக அனுப்பப்படுவதை பார்த்த பக்தர்கள் ரான்னி -அத்திக்கயம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அந்த பக்தர்களை நிலக்கலுக்கு அனுப்பினர். இதுபோல எருமேலிலும் மறியல் நடந்தது.சபரிமலையில் அரவணை டின்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு டின் ஆறு ரூபாய் 47 பைசா என்ற கட்டணத்தில் தினசரி ஒரு லட்சத்து 30 ஆயிரம் டின் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனம் 65,000 மட்டுமே வழங்கியது. இதனால் டின்கள் தட்டுப்பாடு காரணமாக தினசரி உற்பத்தி மூன்று லட்சத்திலிருந்து இரண்டு லட்சத்து 30 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது.இதனால் ஒரு பக்தருக்கு 10 டின் அரவணை என்பது ஐந்து டின்னாக குறைக்கப்பட்டது. இந்த பிரச்னையை சமாளிக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு புதிய டெண்டர் கோரி உள்ளது.கடந்த ஆண்டும் இதுபோன்ற பிரச்னை ஏற்பட்ட போது தேவசம்போர்டு சார்பில் டின் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்காக பத்தணந்திட்டை மாவட்டம் தெள்ளியூரில் 10.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இயந்திரங்கள் வாங்கவோ, அந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை