லே: “உள்நாட்டு ராணுவ உற்பத்தி, 2014ல், 46,000 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது, 1.51 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. ராணுவ பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு, 24,000 கோடி ரூபாயை நெருங்கியுள்ளது,” என, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார். நம் ராணுவத்தின் அங்கமான பி.ஆர்.ஓ., எனப்படும் எல்லை சாலை அமைப்பு, நாட்டை ஒட்டிய எல்லை பகுதிகளில் சாலைகள், பாலங்கள், சுரங்கப் பாதைகள் உள்ளிட்டவற்றை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தது. அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், ராஜஸ்தான், மேற்கு வங்கம், மிசோரம் மாநிலங்களிலும், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களிலும், 5,000 கோடி ரூபாய் மதிப்பில், 93 பாலங்கள், 28 சாலைகள் உட்பட, 125 திட்டப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இவற்றை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு நேற்று அர்ப்பணித்தார். லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லேவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ராணுவ அமைச்சரை, துணைநிலை கவர்னர் கவீந்தர் குப்தா வரவேற்றார். புதிய உயரம்
நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: நம் நாட்டிற்காக ராணுவத்தின் தைரியமிக்க வீரர்களும், பி.ஆர்.ஓ., அமைப்பினரும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். எந்த சூழ்நிலையிலும், எந்த காலநிலையிலும் அவர்கள் பணியாற்றுவதால், தேசம் இன்று புதிய உயரங்களை தொட்டுள்ளது. ஒரே நேரத்தில் அதிகமான திட்டங்களை துவக்கி வைப்பது நாட்டின் வரலாற்றில் இதுவே முதல்முறை. இது பி.ஆர்.ஓ.,வுக்கும், நமக்கும் பெரிய சாதனை. ஒரு காலத்தில், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை உற்பத்தி செய்வதற்கான வலுவான அமைப்பு உள்நாட்டில் இல்லை. மத்திய அரசின் தொடர் முயற்சிகள், இந்த நிலைமையை மாற்றியுள்ளன. கடந்த 2014ல், 46,000 கோடி ரூபாயாக இருந்த உள்நாட்டு ராணுவ உற்பத்தி, இப்போது, 1.51 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், 1,000 கோடி ரூபாய்க்கும் குறைவாக இருந்த ராணுவ பொருட்களின் ஏற்றுமதி, தற்போது, 24,000 கோடி ரூபாயை எட்டியுள்ளது. லடாக்கில் உள்ள தர்புக்- - ஷியோக்- - தவுலத் பேக் ஓல்டி சாலையில் கட்டப்பட்டுள்ள 920 மீ., நீளமுள்ள ஷியோக் சுரங்கப்பாதை, உலகின் மிகவும் கடினமான மற்றும் சவாலான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இது, அனைத்து பரு வநிலைகளிலும் போக்கு வரத்துக்கு உகந்ததாக இருக்கும். சமீபகாலமாக, எல்லைப் பகுதியில் பி.ஆர்.ஓ., அமைப்பினர் காட்டும் வேகமும், திறமையும் நாட்டின் வளர்ச்சிக்கு உந்து தலாக அமைந்துள்ளது. லடாக் உள்ளிட்ட எல்லை பகுதிகள், நம் தொலைத்தொடர்புகள், இணைப்புத் திட்டங்கள் ஆகியவை இன்னும் வலிமையாக இருக்க வேண்டும் என, தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். சிறந்த பங்களிப்பு
எல்லைப் பகுதிகளின் முழுமையான வளர்ச்சிக்கு, மத்திய அரசு தொடர்ந்து முழு உத்வேகத்துடன் பணியாற்றி வருகிறது. ஒரு நாடு வளர்ச்சி பெற பாலங்கள், சாலைகள் மற்றும் சுரங்கங்கள் மிகவும் முக்கியமானவை. குறிப்பாக, எல்லை பாதுகாப்பில் இந்த இணைப்புகள் சிறந்த பங்களிப்பை அளிக்கின்றன. எல்லையில் அமைந்துள்ள சாலைகள், நாட்டின் பாதுகாப்புக்கு உயிர்நாடி. பாதுகாப்பு, பொருளாதாரம், ஆயுதப்படைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கு இவை அவசியமானவை. இதுபோன்ற பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்களால், நம் ஆயுதப்படைகளை விரைவாக ஒருங்கிணைக்க முடியும். வீரர்களுக்கு தேவையான தளவாடங்களை விரைவில் கொண்டு செல்ல முடியும். புதிய திட்டங்களால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் சுற்றுலா வளர்ச்சி பெறும். அங்கு வசிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகி, பொருளாதார நடவடிக்கைகள் ஊக்கம் பெறும். அரசு மீதான மக்களின் நம்பிக்கை வலுப்பெறும். இவ்வாறு அவர் பேசினார்.