புதுடில்லி: அம்மோனியம் நைட்ரேட் வாங்குவோர், விற்பனை செய்வோர் மற்றும் விற்பனை குறித்து தொடர்ந்து கண்காணிக்க, டில்லி மாநகரப் போலீசுக்கு, துணை நிலை கவர்னர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார். டில்லி செங்கோட்டை அருகே, 10ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில், 15 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், டில்லி துணைநிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா, டில்லி மாநகரப் போலீஸ் கமிஷனர் சதீஷ் கோல்ச்சா மற்றும் அரசின் தலைமைச் செயலர் ராஜிவ் வர்மா ஆகியோருக்கு பிறப்பித்துள்ள உத்தரவு: டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் அம்மோனியம் நைட்ரேட் வாங்குவோர், விற்பனை செய்வோர் பட்டியலை போலீஸ் பராமரிக்க வேண்டும். மேலும், விற்பனை அளவையும் தொடர்ந்து கண்காணித்து பதிவு செய்ய வேண்டும். வேதிப் பொருள் விற்பனையகங்களில் அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும். டில்லி போலீஸ் சட்டம், வெடிபொருள் சட்டம் மற்றும் அம்மோனியம் நைட்ரேட் விதிமுறைகள் - 2012 ஆகியவற்றின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, அம்மோனியம் நைட்ரேட்டின் விற்பனை, சேமிப்பு மற்றும் போக்குவரத்து உரிமம் வழங்குவதற்கான 2022ம் ஆண்டின் நிலை ஆணையை, போலீஸ் கமிஷனர் மீண்டும் பரிசீலிக்கலாம். மூளைச்சலவை குடிமக்களை மூளைச்சலவை செய்வதை நோக்கமாகக் கொண்ட பயங்கரவாதிகளைக் கண்காணிக்க, மெட்டா மற்றும் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவன அதிகாரிகளுடன் போலீஸ் ஆலோசனை நடத்த வேண்டும். பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் கவனம் செலுத்தி மனித மற்றும் தொழில்நுட்ப நுண்ணறிவை வலுப்படுத்த வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்புக் கேமரா காட்சிகளை இடைவிடாமல் கண்காணிக்க வேண்டும். ஒருங்கிணைந்த பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், சினிமா தியேட்டர்கள், பூங்காக்கள், மார்க்கெட்டுகள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் அடிக்கடி பாதுகாப்பு சோதனை நடத்த வேண்டும். தேவைப்படும் இடங்களில் கூடுதலாக கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும். மருத்துவமனைகளில் குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள், அவர்களின் மருத்துவக் கல்வி குறித்த விபரங்களை சேகரிக்க மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் படித்த டாக்டர்கள் இரண்டாம் நிலை பின்னணி சோதனைகளுக்காக போலீசிடம் தங்கள் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல, வாகன விற்பனை மற்றும் வாங்குதல், குறிப்பாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களை விற்பனை செய்தல் மற்றும் வாங்குவதில் ஈடுபட்டுள்ள அனைத்து இணையதளங்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் ஆலோசனை நடத்தி பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்த வேண்டும். பதிவு செய்யப்பட்ட உரிமையாளரிடமிருந்து வேறுபட்ட இடங்களில் எந்தச் சூழ்நிலையிலும் வாகனங்களை இயக்க அனுமதிக்கக் கூடாது. இதற்கு, தெளிவான வழிமுறைகள் வகுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ட்ரோன் கொடூரமான பயங்கரவாத தாக்குதல், சில பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்த வேண்டிய அவசியத்தை நமக்கு உணர்த்தியுள்ளது. தெலுங்கானா மற்றும் ஹிமாச்சலப் பிரதேச மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமான பயன்பாட்டுக்கான கொள்கைகளைப் தலைநகர் டில்லியிலும் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ட்ரோன்களை பதிவு செய்ய மத்திய அரசு, 'டிஜிட்டல் ஸ்கை' என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உள்துறை மற்றும் டில்லி போலீஸ் இந்தத் தளத்தை தொடர்ந்து பார்வையிட வேண்டும்.