கர்நாடகாவில், கடும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, பெங்களூரு கே.ஆர்.புரம் மக்கள், 25 கிலோ மீட்டர் துாரம் வாகனங்களில் பயணித்து கிராமங்களில் உள்ள ஏரி, குளங்களில் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.கர்நாடகாவில், கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால், மாநிலத்தின் முக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் அணைகள் நிரம்பவில்லை. தற்போது, வெயில் காரணமாக, எஞ்சிருக்கும் சொற்ப தண்ணீரும் ஆவியாகி வருகிறது. ஆழ்துளை கிணறுகளும் வறண்டு விட்டன. இதனால், மாநிலம் முழுதும் கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது.தலைநகரான பெங்களூரின் முக்கிய பகுதிகளில், தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. அரசு டேங்கர் லாரிகள் மூலம் வினியோகம் செய்தாலும், அது போதுமானதாக இல்லை. பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதி மக்கள், தண்ணீர் தட்டுப்பாட்டால், அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். கே.ஆர்.புரத்தில் 300 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. ஆனால் தண்ணீர் இன்றி, இவை வறண்டு விட்டன.'தண்ணீர் பிரச்னை பற்றி சொல்ல அதிகாரிகளுக்கு, மொபைல் போனில் தொடர்பு கொண்டால் யாரும் எடுப்பது இல்லை. குளிப்பதற்கு, சமையல் செய்வதற்கு கூட தண்ணீர் இல்லை; டேங்கர் தண்ணீரும் கிடைக்கவில்லை.'எனவே, கே.ஆர்.புரத்தில் இருந்து, 25 கிலோ மீட்டர் துாரத்தில் இருக்கும் கிராமங்களுக்கு வாகனங்களில் சென்று, ஏரி, குளங்களில் இருந்து தண்ணீர் எடுத்து வருகிறோம்' என்று, கே.ஆர்.புரம் மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். ஐ.டி., நிறுவனங்கள்
பெங்களூரு என்றால் முதலில் நினைவுக்கு வருவது ஐ.டி., நிறுவனங்கள் தான். இந்தியாவின் மற்ற மாநிலத்தினர், வெளிநாட்டினர் லட்சக்கணக்கில் பெங்களூரு ஐ.டி., நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர். தண்ணீர் தட்டுப்பாட்டால், ஐ.டி., நிறுவனங்களுக்கும், குடிநீர் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.'கொரோனா நேரத்தில் வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதித்தது போல, தற்போதும் வீட்டில் இருந்து வேலை செய்ய அரசு உத்தரவிட வேண்டும்' என்று, ஐ.டி., ஊழியர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். 'பெங்களூரில் இதுபோன்று மோசமான தண்ணீர் தட்டுப்பாட்டை பார்த்தது இல்லை' என்றும், அவர்கள் புலம்பி வருகின்றனர். 4 லட்சம் லிட்டர்
கர்நாடக தீயணைப்பு துறை டி.ஜி.பி., கமல்பந்த் கூறுகையில், ''தீயணைப்பு துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்ற உயரமான கட்டடங்கள், வணிக நிறுவனங்களில், 4 லட்சம் லிட்டர் தண்ணீர், கட்டாயம் இருப்பு வைத்திருக்க வேண்டும். இல்லா விட்டால் உரிமையாளர்களுக்கு அபராதம் அல்லது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.'கோடை காலத்தில் தீ விபத்துகள், அடிக்கடி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பெங்களூரு நகரில் 20, புறநகரில் ஏழு தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. அங்கு உள்ள தீயணைப்பு வாகனங்களுக்கு, போதுமான தண்ணீர் வினியோகிக்கப்பட்டு உள்ளது. தண்ணீரை சேமித்து வைப்பது எப்போதும் நமக்கு பயன் தரும்,'' என்றார்.குளித்தால் தான் கோவிலுக்கு போக முடியும் என்பதால், பெரும்பாலான பக்தர்கள் கோவிலுக்கு செல்வதை தவிர்க்கின்றனர். கோவில்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. சமையலுக்கு 'குட்பை'
விதவிதமாக சமையல் செய்தால் நிறைய பாத்திரங்கள் பயன்படுத்த வேண்டும். அதை கழுவ தண்ணீர் இல்லை. இதனால், விதவித சமையலுக்கு இல்லத்தரசிகள், 'குட்பை' சொல்லிவிட்டு, உப்புமா, புலாவ், தக்காளி சாதம் என சிம்பிளாக சமையலை மாற்றி கொண்டுள்ளனர்.இதுபோல, உறவினர்கள் யாரும் பெங்களூரு வருவதாக போன் செய்தால், 'தயவு செய்து வரவேண்டாம்' என பலரும் கூறி விடுகின்றனர்.பெங்களூரில் வசிக்கும் பக்கத்து மாநிலத்தினர், தங்கள் பிள்ளைகளின் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விட்டதும், சொந்த ஊருக்கு செல்ல துடித்துக் கொண்டிருக்கின்றனர். பலரும், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு, நிறைய பேரை அழைக்காமல், கொஞ்சம் பேரை மட்டும் அழைத்து நடத்துகின்றனர்.பெங்களூரின், குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில், கடந்த 30 ஆண்டுளாக ஏரிகள் முக்கிய பங்கு வகித்தன. தற்போது ஏரிகளை ஆக்கிரமித்து வீடு, கட்டடங்கள் கட்டி உள்ளனர். எச்சரிக்கை மணி
அடுக்குமாடி குடியிருப்பு, மெட்ரோ ரயில் பாதை பணிகளுக்காக, நகரின் பசுமை போர்வையாக இருந்த மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டன.மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியத்தால், ஏரிகள் குப்பை கொட்டும் இடங்களாக மாறின. சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட்டதால், நிலத்தடி நீர் சேகரமாவது கடினமாக உள்ளது. 'பெங்களூரு மக்கள் குடிநீருக்காக கஷ்டப்படுவது, மற்ற மாநில மக்களுக்கு அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி' என்று, பல்வேறு வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
கழிவுநீர் சுத்திகரிப்பு
பெங்களூரில் நிலவும் குடிநீர் பிரச்னையை சரி செய்வது, குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக மாறி உள்ளது. நகரில் 20,000 சதுர அடிக்கு மேல் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடங்களுக்கு, சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை பயன்படுத்தும்படி, குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் உத்தரவிட்டு உள்ளார்.ரயில்வே, எச்.ஏ.எல்., விமானப்படை, பாதுகாப்பு படை, சி.ஆர்.பி.எப்., நிமான்ஸ், விக்டோரியா மருத்துவமனை வளாகங்களில், நீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார். மே 15 ம் தேதிக்குள், ஐந்தாம் கட்ட காவிரி குடிநீர் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஹோலி நடக்குமா?
பெங்களூரில் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள், கணிசமாக வசித்து வருகின்றனர். ஹோலி பண்டிகை வந்து விட்டால், இவர்களை கையில் பிடிக்க முடியாது. ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடி துாவி விளையாடுவர்.ஹோலி அன்று இரவில் பெரிய ஹோட்டல்கள், சொகுசு விடுதிகளில் திறந்த வெளியில் வண்ணப்பொடி துாவி, தண்ணீரை பீய்ச்சி அடித்து டி.ஜே., பாடல்களுக்கு நடனம் ஆடுவர். தண்ணீர் பிரச்னையால் இந்த ஆண்டு ஹோலி கொண்டாட்டம் இருக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனாலும் வரும் 22ம் தேதி முதல், ஹோலி பண்டிகையை கொண்டாட ஹோட்டல்கள், ரிசார்ட்களில் டிக்கெட் முன்பதிவு நடக்கிறது. அவர்களுக்கு எங்கிருந்து தண்ணீர் கிடைக்கும் என தெரியவில்லை.