பெங்களூரு : ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவான பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரில் சி.ஐ.டி., சிறப்பு விசாரணைக்குழுவினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், ஹாசன் பண்ணை வீடுகளில் அவர்கள் நேற்று சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.ஹாசன் தொகுதியின் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. இவரது தந்தை ரேவண்ணா, 66, ஹொளேநரசிபுரா தொகுதியின் ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வாக உள்ளார். சில பெண்களுடன் பிரஜ்வல் நெருக்கமாக இருக்கும், ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.இந்த விவகாரம் குறித்து எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழுவை அரசு அமைத்துள்ளது. இதைத் தொடர்ந்து பிரஜ்வலும், அவரது தந்தை ரேவண்ணாவும் தன்னை பலாத்காரம் செய்ததாக, அவரது வீட்டு வேலைகார பெண் புகார் அளித்தார்.இதன்பேரில் தந்தை - மகன் மீது ஹொளேநரசிபுரா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு, எஸ்.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது.இந்த நிலையில், பிரஜ்வலால் பாதிக்கப்பட்டதாக கூறி, நேற்று முன்தினம் மேலும் ஒரு பெண், ஹாசன் மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிபதி முன் ரகசிய வாக்குமூலம் அளித்தார். இது இரண்டாவது புகாராக பதிவாகி இருந்தது.இதைத் தொடர்ந்து பிரஜ்வல் மீது ஹாசனை சேர்ந்த, ம.ஜ.த., பெண் பிரமுகர் ஒருவர், சி.ஐ.டி., - ஏ.டி.ஜி.பி., பிரிஜேஷ்குமார் சிங்கிற்கு மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பி உள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:ஹாசன் மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் கவுன்சிலராக இருந்தேன். 2021ல் எனக்கு தெரிந்த கல்லுாரி மாணவியர் சிலருக்கு, விடுதியில் அறை வாங்கிக் கொடுப்பது தொடர்பாக, ஹாசனில் உள்ள எம்.பி., அலுவலகத்தில் பிரஜ்வலை சந்தித்தேன்.மாடியில் உள்ள அறைக்கு, என்னை அழைத்துச் சென்றார். என்னை படுக்கையில் பிடித்து தள்ளி, பலாத்காரம் செய்ய முயன்றார். நான் எதிர்ப்புத் தெரிவித்தேன்.'உன் கணவரால் தான், எனது அம்மா பவானிக்கு கிடைக்க வேண்டிய எம்.எல்.ஏ., சீட் பறிபோனது. எனக்கு ஒத்துழைக்காவிட்டாலும், உன்னையும், உனது கணவரையும் துப்பாக்கியால், சுட்டுக் கொல்வேன்' என, பிரஜ்வல் மிரட்டினார்.பின்னர், துப்பாக்கிமுனையில் எனது ஆடைகளை கலைந்து, என்னை பலாத்காரம் செய்தார். அதை வீடியோ எடுத்தார். புகைப்படமும் எடுத்தார். இதுபற்றி வெளியே சொன்னால், வீடியோவை வெளியிடுவேன்' என்று மிரட்டினார்.பின்னர் அவர் விருப்பப்படும் போதெல்லாம் என்னை அடிக்கடி பலாத்காரம் செய்தார். 'ஒத்துழைக்க மறுத்தால் உன்னை பலாத்காரம் செய்த வீடியோவை வெளியிடுவேன்' என, அவர் மிரட்டினார்.சிறப்பு விசாரணை குழுவின் மீது, நம்பிக்கை இருப்பதால் புகார் செய்கிறேன்.இவ்வாறு தன் புகாரில் அந்த பெண் கூறியுள்ளார்.இந்த புகாரின்பேரில், பிரஜ்வல் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376 (2) (என்) ஒரே பெண்ணை தொடர்ந்து பலாத்காரம் செய்வது; 354 (ஏ) (1) வலுக்கட்டாயமாக பாலியல் உறவு கொள்வது; 354 (பி) ஆடைகளை அகற்றும் நோக்கில் பெண்ணை தாக்குவது; 66 (இ) தனியுரிமையை மீறுவது உள்ளிட்ட பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்யப்பட்டது.* முன்ஜாமின் மனு வாபஸ்
பிரஜ்வல், ரேவண்ணா மீது பதிவான முதல் வழக்குகளில், அவர்கள் எளிதில் ஜாமினில் வெளிவரும், பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கு கண்டனம் எழுந்ததால் மாநில அரசு சுதாரித்துக் கொண்டது.இதனால் பிரஜ்வல் மீது தற்போது, கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவாகி உள்ளது. தற்போது பதிவாகி இருக்கும் வழக்குகளில் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்து, ஏழு, மூன்று ஆண்டுகள் வரை, சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இது பிரஜ்வலுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகும்படி பிரஜ்வல், ரேவண்ணாவுக்கு, சிறப்பு விசாரணை குழு இரண்டு முறை சம்மன் அனுப்பியது. பிரஜ்வல் வெளிநாட்டில் இருப்பதால், விசாரணைக்கு ஆஜராகுவதில் இருந்து, அவகாசம் கேட்டு உள்ளார்.ஆனால் ரேவண்ணா இங்கு இருந்தும், விசாரணைக்கு ஆஜராகாமல் உள்ளார். கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனு மீது நேற்று முன்தினம் நீதிபதி பிரீத் விசாரணை நடத்தினார்.இந்த மனு மீது நேற்று விசாரணை நடந்தபோது, சி.ஐ.டி., சார்பில் ஆஜரான வக்கீல் ஜெகதீஷ் வாதாடுகையில், ''மனுதாரர் பலாத்கார வழக்கு பதிவாகவில்லை. ஜாமினில் வெளிவரக் கூடிய வகையில் தான், வழக்குப் பதிவாகி உள்ளது. இதனால் அவருக்கு முன்ஜாமின் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை,'' என்று வாதிட்டார். இதை ரேவண்ணா தரப்பும் ஏற்றுக்கொண்டு, முன்ஜாமின் மனுவை திரும்பப் பெற்றது.* பவானிக்கு சம்மன்
இதற்கிடையில் ஹொளேநரசிப்புரா அருகே படுவலஹிப்பே, சென்னராயப்பட்டணா அருகே கன்னிகடாவில் உள்ள, ரேவண்ணாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, விசாரணை அதிகாரி சீமா லட்கர் தலைமையில், சிறப்பு விசாரணை குழு அதிரடி சோதனை நடத்தியது. மற்றொரு குழுவினர் ஹொளேநரசிப்புரா ஹரதனஹள்ளியில் உள்ள, ரேவண்ணா வீட்டிலும் சோதனை நடத்தினர்.இங்கு சோதனை நடந்தபோது, ரேவண்ணா மனைவி பவானியின் அம்மா மட்டும், அந்த வீட்டில் இருந்தார். சோதனை முடிந்ததும், விசாரணைக்கு ஆஜராக 3வது நோட்டீஸை, ரேவண்ணா வீட்டின் கதவில் ஒட்டிவிட்டு, விசாரணை குழுவினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.விசாரணைக்கு ஆஜராகும்படி, ரேவண்ணா மனைவி பவானிக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதுபோல பெங்களூரு பசவனகுடியில் உள்ள ரேவண்ணா வீட்டில், விசாரணை அதிகாரி சுமன் பன்னேகர் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர். ஹாசனில் சோதனை நடத்திய, விசாரணை குழு அங்கேயே தங்கி உள்ளது. இந்த வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
ரேவண்ணா மீது பெண் கடத்தல் வழக்கு
மைசூரு கே.ஆர்., நகர் போலீஸ் நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு 20 வயது வாலிபர் அளித்த புகார்:கடந்த 2018ல் 2021 வரை, ஹாசன் ஹொளேநரசிப்புராவில் உள்ள ரேவண்ணா வீட்டில், எனது அம்மா வேலை செய்தார்.கடந்த 2021ல் வேலையில் இருந்து நின்றுவிட்டார். கடந்த மாதம் 29ம் தேதி இரவு, எங்கள் வீட்டிற்கு ரேவண்ணாவின் உறவினர் சதீஷ் பாபு வந்தார். எனது அம்மாவிடம், 'போலீஸ் உன்னிடம் விசாரித்தால், நாங்கள் சிக்கிக் கொள்வோம்' என்றார்.ரேவண்ணா அழைப்பதாகக் கூறி, மோட்டார் சைக்கிளில் எனது அம்மாவை அழைத்துச் சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.கடந்த 1ம் தேதி எனது நண்பர்கள் சிலர், என்னிடம் மொபைல் போனில் பேசினர். உனது அம்மாவின் கை, கால்களை கட்டி பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோ வெளியாகி இருப்பதாக கூறினர். எனது அம்மாவை பற்றி, இப்போது எந்த தகவலும் இல்லை. அவரை கடத்திச் சென்று, சிறை வைத்துள்ளனர். அவரை மீட்டுத் தர வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டு இருந்தது.அந்த புகாரின்பேரில் ரேவண்ணா, சதீஷ் பாபு மீது கடத்தல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவானது. நேற்று காலை சதீஷ் பாபு கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.கடத்தல் வழக்கில் முன்ஜாமின் கேட்டு, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் ரேவண்ணா தரப்பில் அவசரமனுத் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று மாலை விசாரணை நடந்தது.வாதங்களை கேட்ட பின்னர் நீதிபதி சந்தோஷ் பட் கூறுகையில், ''இந்த வழக்கும், பாலியல் தொடர்பான வழக்கு. முழு விவரங்களையும் பெற்ற பின்னர், முன்ஜாமின் மனு மீது, உத்தரவு பிறப்பிக்கிறேன்,'' என்றார்.இந்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற உள்ளது.