பெங்களூரு: எஸ்.ஐ., தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையை, முதல்வர் சித்தராமையாவிடம், ஓய்வுபெற்ற நீதிபதி வீரப்பா தாக்கல் செய்தார்.கர்நாடகாவில் 545 எஸ்.ஐ., பணியிடங்களை நிரப்ப, 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 92 மையங்களில் தேர்வு நடந்தது. 2022 பிப்ரவரியில் தேர்வு முடிவுகள் வெளியாயின. அப்போது தேர்வில் முறைகேடு நடந்தது வெளிச்சத்துக்கு வந்தது.எஸ்.ஐ., பதவிக்காக 30 லட்சம் ரூபாய் முதல் 80 லட்சம் ரூபாய் வரை, தேர்வர்களிடம் இருந்து சிலர் வாங்கியதும், வினாத்தாளில் திருத்தம் செய்து, பணம் கொடுத்தவர்களை தேர்ச்சி பெற வைத்ததும் தெரியவந்தது. இதுகுறித்து அப்போதைய பா.ஜ., அரசு சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட்டது. அமைச்சர்களுக்கு தொடர்பு
ஆள்சேர்ப்பு பிரிவு முன்னாள் கூடுதல் டி.ஜி.பி., அம்ருத்பால் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், பணம் கொடுத்த தேர்வர்கள் என, 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மாநிலம் முழுவதும் 52 போலீஸ் நிலையங்களில் தேர்வு முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவாகி இருந்தது.அப்போது எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ், தேர்வு முறைகேட்டில் பா.ஜ., அமைச்சர்களான அரக ஞானேந்திரா, அஸ்வத் நாராயணா ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டியது.தாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், தேர்வு முறைகேடு குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும், காங்கிரஸ் அறிவித்து இருந்தது. அதன்படி சட்டசபை தேர்தல் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், எஸ்.ஐ., தேர்வு முறைகேடு குறித்து விசாரணைக்கு உத்தரவிடும்படி, முதல்வர் சித்தராமையாவுக்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். என்ன நடவடிக்கை?
இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 23ம் தேதி, ஓய்வுபெற்ற நீதிபதி வீரப்பா தலைமையில், தேர்வு முறைகேடு குறித்து நீதி விசாரணைக்கு, அரசு உத்தரவிட்டு இருந்தது. அவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க, டி.ஜி.பி.,க்கு அரசு உத்தரவிட்டது.இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக, தேர்வு முறைகேடு குறித்து விசாரணை நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், அறிக்கையை நீதிபதி வீரப்பா தயாரித்தார். அந்த அறிக்கையை முதல்வர் சித்தராமையாவிடம் நேற்று தாக்கல் செய்தார். அந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு ஆலோசிக்கிறது.
இன்று மறுதேர்வு
எஸ்.ஐ., தேர்வில் முறைகேடு நடந்ததால், கடந்த மாதம் 23ம் தேதி, மறுதேர்வு நடக்க இருந்தது. ஆனால் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கேட்டுக் கொண்டதால், ஜனவரி 23ம் தேதிக்கு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று தேர்வு நடக்கிறது. பெங்களூரில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு மையங்களை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.