உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியவாத காங்.,கிற்கு உரிமை கோரும் வழக்கில் திருப்பம்! அஜித் பவாருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

தேசியவாத காங்.,கிற்கு உரிமை கோரும் வழக்கில் திருப்பம்! அஜித் பவாருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியினர், சரத் பவாரின் புகைப்படங்களை சுவரொட்டியில் பயன்படுத்துவது ஏன்? சரத் பவாரிடம் இருந்து பிரிந்து சென்றபின், கடிகார சின்னத்தை பயன்படுத்துவது ஏன்? வேறு ஏதாவதொரு சின்னத்தை பயன்படுத்தலாமே' என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ., தேசியவாத காங்., அஜித் பவார் தரப்பு கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, முன்னாள் மத்திய அமைச்சரான சரத் பவாரால் துவங்கப்பட்ட தேசியவாத காங்., சமீபத்தில் பிளவுபட்டது.

கடிகார சின்னம்

அவரது சகோதரரின் மகனான அஜித் பவார், கட்சியில் இருந்த 53 எம்.எல்.ஏ.,க்களில் 41 பேரை பிரித்துச் சென்று, பா.ஜ., கூட்டணியில் இணைந்தார். அவருக்கு துணை முதல்வர் பதவி தரப்பட்டது. இதைத் தொடர்ந்து, கட்சியின் பெயர் மற்றும் கடிகார சின்னம் தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே போட்டி நிலவியது. அஜித் பவார் தலைமையிலான கட்சி தான் உண்மையான தேசியவாத காங்., என, தேர்தல் கமிஷன் தெரிவித்தது; கடிகார சின்னத்தையும் அவர்களுக்கே அளித்தது.சரத் பவார் பிரிவுக்கு, தேசியவாத காங்., - சரத்சந்திர பவார் என்ற பெயரை தற்காலிகமாக அளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சரத் பவார் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.இந்த மனு நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தபோது, சரத் பவார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கூறியதாவது:அஜித் பவார் தரப்பினர் தங்கள் சுவரொட்டிகளில் சரத் பவாரின் புகைப்படங்களை பயன்படுத்துகின்றனர்.இதன் வாயிலாக, தேர்தலின் போது கிராமப்புற மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி, ஓட்டுகளை அபகரிக்கும் எண்ணத்தில் அஜித் பவார் தரப்பினர் செயல்படுகின்றனர். இந்த கட்சியின் ஒட்டு மொத்த அமைப்பையும் உருவாக்கியவர் சரத் பவார் தான்.

குழப்பம்

கடிகார சின்னத்தை பார்க்கும் மக்கள், அது, சரத் பவாரின் சின்னம் என கருதி, அஜித் பவார் தரப்புக்கு ஓட்டளிக்கும் நிலை ஏற்படும். எனவே, கடிகார சின்னம் இல்லாமல், இரண்டு தரப்பும் வேறு ஏதாவது சின்னத்தில் போட்டியிட வேண்டும் என விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார். இதைக் கேட்ட நீதிபதிகள் தெரிவித்த கருத்து:அஜித் பவார் தரப்பினர், தங்கள் மீது நம்பிக்கை இருந்தால், அஜித் பவாரின் புகைப்படங்களை பயன்படுத்த வேண்டியது தானே! சரத் பவாரிடமிருந்து பிரிந்து சென்றபின், எதற்கு அவரது புகைப்படத்தை பயன்படுத்த வேண்டும். கட்சி எப்போது பிளவு பட்டதோ, அப்போதே இரு பிரிவினருக்கும் வெவ்வேறு சின்னங்களை தேர்தல் கமிஷன் ஒதுக்கி இருக்க வேண்டும். ஒரு தரப்புக்கு மட்டும் கடிகார சின்னத்தை ஒதுக்கியது குழப்பத்தை ஏற்படுத்தும் செயல். அஜித் பவார் தரப்பு தனியாக வந்து விட்டது. அப்படியானால் தேர்தலுக்கு கடிகார சின்னத்தை பயன்படுத்தாமல், தனியாக ஒரு சின்னத்தை பயன்படுத்தலாமே! தேர்தல் வரும்போது உங்களுக்கு சரத் பவார் வேண்டும்; தேர்தல் இல்லாதபோது வேண்டாமா? சரத் பவார் புகைப்படங்களை இனி பயன்படுத்த மாட்டோம் என, உறுதிமொழியை அஜித் பவார் தரப்பு தாக்கல் செய்ய வேண்டும். இதுகுறித்த பொது அறிவிப்பை மக்களிடம் விளம்பரப்படுத்த வேண்டும். இந்த மனு தொடர்பாக விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Godfather_Senior
மார் 15, 2024 18:43

அதுக்கென்ன அபிடேவிட் தாக்கல் செய்துட்டா போச்சு . இனிமேல் சரத் பவார் போட்டோவை காட்டினால் மக்களும் ஒட்டு போட மாட்டார்கள், ஆகவே பிரதமர் படத்தையே போட்டால் போச்சு


ஆரூர் ரங்
மார் 15, 2024 10:39

ஒரு பிரிவுக்கு சுவர் கடிகாரம் இன்னொரு பிரிவிற்கு கைக் கடிகாரம் சின்னங்களை அளித்திருக்கலாம்.????


HARIPRASATH G
மார் 15, 2024 10:13

2024 election la admk virkum ithu porundhi vida pogudhu.


தாமரை மலர்கிறது
மார் 15, 2024 01:44

அஜித் பவார், ஷிண்டே ரெண்டு பேரின் கட்சியும் கொஞ்சநாள் தான் இருக்கும். வரும் தேர்தலுக்கு பின், ரெண்டும் பிஜேபியுடன் சரத்குமார் கட்சி போன்று இணைந்துவிடும்.


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ