| ADDED : ஜூலை 09, 2024 05:04 PM
விஜயவாடா: சென்னை ஐஐடி.,யில் இடம் கிடைத்தும் சேர முடியாமல் தவித்த 25 மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷூக்கு வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக தகவல் அனுப்பினர். இதனையடுத்து அவர் எடுத்த நடவடிக்கை காரணமாக அந்த மாணவர்கள் தற்போது ஐஐடி.,யில் இணைந்துள்ளனர்.ஆந்திர மாநில கல்வி வாரியத்தின் விதிகளின்படி, பிளஸ் 2 படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், இரு மொழிப்பாடங்களில் ஒன்றை படிப்பதிலும், தேர்வு எழுதுவதிலும் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அத்தகைய மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழில் ‛ E ' என அச்சிட்டு வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 25 பேர் ஐஐடி.,யில் சேர வேண்டும் என்ற கனவுடன் கடுமையாக படித்து பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று, நுழைவுத் தேர்வு எழுதி அதில் தேர்ச்சியும் பெற்றனர். பிறகு, சென்னை ஐஐடி.,யில் விண்ணப்பித்த போது அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம், ஐஐடி., விதிப்படி 5 பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டும். இதனையடுத்து அந்த மாணவர்கள், மாநில கல்வித்துறையை கவனிக்கும் நாரா லோகேஷூக்கு வாட்ஸ் ஆப் மூலம் செய்தி அனுப்பினர். அடுத்த அரை மணி நேரத்தில் மாணவர்களை தொடர்பு கொண்டு குறைகளை கேட்ட நாரா லோகேஷ், உடனடியாக கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு, மாற்றுத்திறனாளி மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் ‛E' என்பதற்கு பதில் 35 மதிப்பெண் என நிரப்பி தரும்படி கூறினார். மேலும், சென்னை ஐஐடி நிர்வாகத்தினருடனும் பேசினார். இதனையடுத்து 25 மாணவர்களின் ஐஐடி கனவு நனவாகி உள்ளது.இது தொடர்பாக விஜயவாடாவைச் சேர்ந்த மாருதி பிரித்வி சத்யதேவ் என்பவர் கூறியதாவது: ஜேஇஇ நுழைவுத் தேர்வில் 170வது இடம் கிடைத்தது. மாற்றுத்திறனாளிகள் பிரிவில் சேர வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், எனது விண்ணப்பம் உட்பட 25 பேரின் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இது எங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால், நாரா லோகேஷ் தலையிட்டு எங்களது பிரச்னையை தீர்த்து வைத்தார் என்றார்.ஐஐடி.,யில் இடம் கிடைத்த மாணவர்கள் நாரா லோகேஷை சந்தித்து நன்றி தெரிவித்தனர். மாணவர்களை அமைச்சர் வாழ்த்து தெரிவித்து பரிசளித்து கவுரவித்தார்.