சாதனையாளர்களின் வெற்றி வரலாறு
பலரும், படிப்பை முடித்ததும் ஏதாவது வேலையில் ஒட்டிக்கொண்டு, மாத சம்பளம் வாங்கியே காலத்தை ஓட்டி விடுவர். எதிலும் "ரிஸ்க்' எடுக்க விரும்பாதவர்கள் இவர்கள். சிலர் மட்டுமே, வாழ்க்கையில் "ரிஸ்க்' எடுக்கின்றனர். சொந்தமாகவே தொழில் துவங்கி, சாதித்துக் காட்டி, பலருக்கும் வேலை தருவோராக மாறுகின்றனர். அப்படிப்பட்ட சிலரின் வெற்றி வரலாறு இது: வினிதா பாலி,எம்.டி., பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ். "வெற்றி பெற தொடர்ந்து உழைக்க வேண்டும். முடியாதவற்றை நினைக்கக் கூடாது'' என்ற தாரக மந்திரத்துடன் உழைத்து பிரிட்டானியாவை பெரிய நிறுவனமாக மாற்றியுள்ளார். 2000ம் ஆண்டுக்கு பிறகு பால் உணவுப்பொருள் துறையில் நிறுவனங்கள் பல துவங்கப்பட்டன. போட்டியை உணர்ந்து, வினிதா திறம்பட செயல்பட்டார். இதனால் 2005ம் ஆண்டில் பிரிட்டானியாவின் விற்பனை 1,600 கோடி ரூபாயை எட்டியது. வாடிக்கையாளர்களை கவர புதிய யுக்திகளை கையாண்டார். வியாபாரம் சிறப்பாக நடக்க, அடிக்கடி புதிய மாடல்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்பது இவரது கருத்து. குறிப்பாக பிரிட்டானியாவின் ஏழு வகைகள் விற்பனையில் சாதனை படைத்தன. இதனால் 2006-07ம் ஆண்டில் நிறுவனம் 25 சதவீதம் அதிக லாபம் பெற முடிந்தது. மூலப்பொருட்கள் உற்பத்திக்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கினார். தற்போது விற்பனையாகும் பிஸ்கட், பிரெட் பொருட்களில் 50 சதவீதம் பிரிட்டானியா நிறுவனத்தினுடையவை. இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் பட்டியலில் பிரிட்டானியா முதல் பத்து இடங்களுக்குள் உள்ளது. இவை அனைத்துக்கும் வினிதா பாலியின் திட்டமிட்ட உழைப்புதான் காரணம். அனில் குப்தா,இணை இயக்குனர் ஹேவெல்ஸ் இந்தியா சிறிய நிறுவனமாக இருந்த ஹேவெல்ஸ் இந்தியா, அனில் குப்தாவின் அயராத உழைப்பால் பெரிய நிறுவனமாக மாறியுள்ளது. வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் நிறுவனம் என்ற பெயரையும் பெற்றுள்ளது. ஆரம்ப காலத்தில் ஹேவெல்ஸ் "சுவிட்ச்' மட்டும் தயார் செய்து வந்தது. அனில் குப்தா பொறுப்பேற்ற பின் "மின் விளக்கு' மற்றும் "பேன்' தயாரிப்பில் ஆர்வம் காட்டினார். இதனால் 2006-2007ம் ஆண்டு வருமானம் 1,600 கோடி ரூபாயை எட்டியது. 2007ம் ஆண்டில் ஜெர்மனி நிறுவனத்துடன் இணைந்து "மின் விளக்கு' தயார் செய்தார். இதனால் 70 சதவீதம் அளவுக்கு விற்பனை அதிகமானது. இரண்டு நிறுவனமும் இணைந்து 2007ல் 3 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டினர். ரொமேஷ் சோப்டி,சி.இ.ஓ., இண்டஸ்இண்ட் வங்கி மூன்று ஆண்டுகளுக்கு முன் நலிந்த நிலையில் இண்டஸ்இண்ட் வங்கி இருந்தது. 2008ம் ஆண்டில் ரொமேஷ் பதவியேற்ற பின், நிலைமை தலைகீழாக மாறியது. 2011ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த வங்கியின் நிகர லாபத்தை 577.32 கோடி ரூபாயாக உயர்த்தினார். இவரது வருகைக்கு பின் இண்டஸ்இண்ட் வங்கியில் கடன் வாங்குவோர், செலுத்துவோர் அதிகரித்தனர். குறிப்பிட்ட காலத்தில் வங்கி 3.47 சதவீதம் வளர்ச்சி பெற்றது. நான்கு சக பணியாளர்களுடன் இணைந்து வங்கியை மென்மேலும் உயர்த்தினார். வங்கியின் வட்டி விகிதம், "லோன்' திட்டங்கள் ஆகியவற்றில் மாற்றத்தை கொண்டு வந்தார். இதனால் மக்கள் மத்தியில் வங்கியின் மதிப்பு கூடியது. புரோடின் பானர்ஜி,சி.இ.ஓ., டாடா ஹவுசிங் 2005ம் ஆண்டு டாடா ஹவுசிங்கின் முழுப் பொறுப்பையும் பானர்ஜி ஏற்றார். தனித்திறமை, கடின உழைப்பு ஆகியவற்றின் மூலம் தன்னையும், நிறுவனத்தையும் உயர்த்தினார். ஐந்து ஆண்டுகளுக்கு முன் இந்நிறுவனம் டாடாவின் முத்திரையை பயன்படுத்த முடியாமல் இருந்தது. இவர் பதவியேற்ற பின் டாடா முத்திரையை பயன்படுத்த அதிகாரம் வாங்கினார். இதனால் நிறுவனத்தின் மதிப்பு உயர்ந்தது. 2007ம் ஆண்டில் 100 கோடி ரூபாய் அளவிலான திட்டங்களை தீட்டினார். 2009ம் ஆண்டு இரண்டு கட்டங்களாக, வீட்டு விற்பனையை பிரித்தார். 410 லட்ச ரூபாய், 1235 லட்ச ரூபாய் வீடுகள் என இரண்டு வகையில் பிரித்து விற்றார். இதனால் நடுத்தர மக்களையும் கவர முடிந்தது. அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தவும் முடிந்தது. பானர்ஜியால் தான் இந்நிறுவனம் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது என உடன் பணிபுரிவோர் தெரிவிக்கின்றனர்.