கடல் கடந்து செல்லும் இந்திய பல்கலைக்கழகங்கள்
பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் கனவு பெரிய, சிறந்த கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டும் அதுவும் வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்பதாக இருக்கும். ஆனால் மதிப்பெண்கள், பொருளாதாரம், வாய்ப்புகள் போன்ற நிலைகளால் வெளிநாட்டுக் கல்வியை பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகிவிடுகிறது. வெளிநாட்டுக் கல்விக்கான வாய்ப்புகளை நாம் தேடி அலைந்துகொண்டிருக்கும் வேளையில் வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவைத் தேடி வந்து கொண்டிருக்கும் எண்ணிக்கை ஓவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. தற்போது இது ஆச்சரியமான தகவலாக பலரால் பார்க்கப்பட்டாலும், பல்வேறு நாடுகளிலிருந்து கல்விக்காக இந்தியாவைத் தேடி நாளந்தா போன்ற பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க மாணவர்கள் வந்திருக்கிறார்கள் என்று வரலாற்றுப் பாடங்களில் படித்திருந்ததை மறந்து போனவர்களுக்கு மட்டுமே இது ஆச்சரியமாக இருக்கலாம். இடைப்பட்ட காலத்தில் கல்வியில் பின் தங்கிய நாடாக மாறியிருந்தாலும், மீண்டும் முன்னோக்கி செல்ல ஆரம்பித்திருக்கிறது. கல்வி நிலையங்கள் பெருகப் பெருக மாணவர்களின் பள்ளிக் கல்விக் கனவு ஒரளவு நிறைவேறி வந்தது. கல்லூரிகளைப் பொறுத்த அளவில் இங்கே உள்ள பட்டப்படிப்புகள் போதுமானவையாக இல்லை என்று கருதியவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களைத் தேடி செல்ல ஆரம்பித்தனர். தற்பொழுது அந்த குறையையும் போக்கும் விதமாக பல பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் சிறப்பான செயல் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. ஒரு சில கல்லூரிகள் ஒரு செமஸ்டரையோ அல்லது 2 செமஸ்டர்களையோ வெளிநாட்டில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் வகையில் பாடத்திட்டங்களை அமைத்து அளித்து வருகின்றன. இதனால் வெளிநாட்டில் கல்வி கற்கும் எண்ணம் கொண்டவர்களின் ஆசை, இந்தியாவிலேயே எளிதாக நிறைவேறும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவைத் தேடி படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்த அளவிற்கு, இந்திய கல்வி நிறுவனங்களின் தரம் சிறப்பான அளவில் உயர்ந்து வருகிறது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கு வருகை புரிந்து கல்விக் கண்காட்சியை நடத்தி மாணவர்களை சேர்க்கையை எளிதாக்கி வருகின்றனர். இப்பொழுது அதே போன்று இந்திய பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் வெளிநாடுகளில் கல்விக்கண்காட்சிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்திருக்கின்றன. மாற்றம் தரும் இந்த முயற்சிகள் பொருளாதார நோக்கங்களை முன்னிறுத்தாமல் கல்விக்கான வளர்ச்சியை மட்டுமே முன்னிறுத்த வேண்டும் என்பது கல்வியலாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஏனெனில் இந்தியாவிலேயே பட்ட படிப்புகளை படிப்பதற்கு போதுமான பொருளாதார வசதிகள் இல்லாமல் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள் என்பது வருத்தப்படக்கூடிய தகவலாகும்.