குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதவர்கள் மீது நடவடிக்கை; கமிஷனர் கடும் எச்சரிக்கை
போத்தனூர்: கோவை மாநகராட்சியின், 97வது வார்டுக்குட்பட்டது கோண்டிஸ் காலனி. சுமார் ஒரு ஏக்கர் பரப்பில், 100 வீடுகளில், 300 குடும்பத்தை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்டோர், கூட்டுக் குடும்பமாக வசிக்கின்றனர்.இங்குள்ள பெரும்பாலானோர் கல்வியறிவு அல்லாதோர். இச்சூழலில் இவர்களுக்கு தேவையான வீடு வசதியை ஏற்படுத்துவதற்காக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார்.அப்போது, தற்போதுள்ள இடத்திலேயே புதிய குடியிருப்பை உருவாக்குவது அல்லது அருகேயுள்ள அரசு இடத்தில் கட்டுவது, தற்போதுள்ள பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்துவது, கல்வியின் முக்கியத்துவம் குறித்து ஆலோசனை வழங்குவது உள்ளிட்டவை, குறித்து முடிவு செய்யப்பட்டது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.தொடர்ந்து, சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. துணை மேயர் வெற்றி செல்வன், மாநகராட்சி ஆளும்கட்சி தலைவர் கார்த்திகேயன், 97வது வட்ட கழக செயலாளர் மகாலிங்கம் மற்றும் அப்பகுதி மக்கள் பங்கேற்றனர்.