ஈ.வெ.ரா., பற்றி அரசு தேர்வில் கேள்விகள் கேட்பது அறிவார்ந்ததா? சீமான் ஆவேசம்
சென்னை: ஆங்கிலேயர் ஆட்சியில் போராடும் உரிமையாவது இருந்தது. சுதந்திர இந்தியாவில் அந்த உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.சென்னையில் போராட்டம் நடத்தியதால், கைது செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களை, சீமான் நேற்று சந்திக்க சென்றார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தியதால், கைது செய்யப்பட்ட ஆசிரியர்களுடன் மொபைல் போனில் பேசினார்.பின், அவர் அளித்த பேட்டி:வீடு தேடி அரசு என, பல நுாறு கோடிகளை கொட்டி, தி.மு.க., அரசு விளம்பரம் செய்கிறது. திராவிட கட்சிகள் எப்போதுமே, செய்தி அரசியலை தான் செய்வர். அவர்களுக்கு, சேவை அரசியலோ, செயல் அரசியலோ தெரியாது.ஆங்கிலேயர் ஆட்சியில் போராடும் உரிமையாவது இருந்தது. சுதந்திரம் பெற்ற இந்தியாவில், போராடுகிற உரிமையைக்கூட மறுக்கின்றனர். அடக்குமுறை ஆட்சி நடக்கிறது.இப்போதும், மக்கள் சாலையை தேடி வரும் அளவுக்கு, அவர்களுக்கு அவ்வளவு பிரச்னைகள் உள்ளன. சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின், ஒரு லட்சம் போராட்டத்திற்கு, அரசு அனுமதி அளித்துள்ளது என்கிறார்.அப்படி என்றால், ஒரு லட்சம் பிரச்னைகளை, தி.மு.க., அரசு அளித்திருக்கிறது என்று அர்த்தம். பகுதி நேர ஆசிரியர்கள், அ.தி.மு.க., ஆட்சியில் போராடினர்; நானும் சேர்ந்து போராடினேன்.அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலினும் போராடியதோடு, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் பணி நிரந்தரம்' என வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றுங்கள் என்று தான் ஆசிரியர்கள் கேட்கின்றனர்.டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில், விடியல் பயணம் எப்போது துவங்கியது என்றும், ஈ.வெ.ராமசாமி குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன.வ.உ.சி., காமராஜர், முத்துராமலிங்க தேவர், நல்லகண்ணு போன்றவர்களை போல், நாட்டின் விடுதலைக்காக ஈ.வெ.ராமசாமி சிறைக்குச் சென்றதில்லை. அப்படி இருக்க, அவர் குறித்த கேள்விகள் அறிவார்ந்தவையா?இவ்வாறு அவர் கூறினார்.