உள்ளூர் செய்திகள்

தேசிய அளவிலான வினாடி-வினா : கோவை அரசுப்பள்ளி மூன்றாமிடம்

கோவை: ரிசர்வ் வங்கி சார்பில், மும்பையில் நேற்று நடந்த தேசியஅளவிலான வினாடி-வினா போட்டியில், கோவை அரசுப்பள்ளி மாணவர்கள், மூன்றாம் பரிசு பெற்றனர்.ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், பொருளாதார கல்வி குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க, அரசுப்பள்ளிகளில் படிக்கும், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வினாடி-வினா போட்டி நடத்தியது. இதில், தென்மண்டல அளவிலான போட்டியில், கோவை, காந்திமாநகர் அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த, பத்தாம் வகுப்பு மாணவி ராம்பிரியா மற்றும் மாணவர் ஆகாஷ் ஆகியோர் முதல் பரிசு வென்றனர். தேசியளவிலான போட்டி, நேற்று மும்பையில் நடந்தது. இதில், தமிழகம், அசாம், பீகார், ஹரியானா, மத்தியபிரதேசம் மற்றும் டில்லியில் இருந்து, அரசுப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில், தமிழகத்தில் இருந்து சென்ற, கோவை, காந்திமாநகர் அரசுப்பள்ளி மாணவர்கள் மூன்றாம் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது. முதல்பரிசு டில்லி மாணவர்கள் அணியும், இரண்டாம் பரிசு மத்திய பிரதேசத்தை சேர்ந்த மாணவர்களும் பெற்றனர். பள்ளி தலைமையாசிரியை விஜயலட்சுமி கூறுகையில், பத்தாம் வகுப்பு படிக்கும் இருவரும், தேசியளவிலான சுற்றில் வெற்றி பெற வேண்டுமென கடுமையாக உழைத்தனர். இவர்களுக்கு, ஆசிரியை சுமதி, மிகுந்த ஊக்கமளித்து, அனைத்து நிலை போட்டிகளுக்கும், அழைத்து சென்றார். இவர்களின் வெற்றி மற்ற மாணவர்களும், போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென்ற, உந்துதலை ஏற்படுத்தும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்