உள்ளூர் செய்திகள்

கூடுதலாக 1,500 ஆசிரியர்கள் நியமனம்: 5 ஆண்டுக்கு ஒரே இடத்தில் தான் பணி

சென்னை: அரசு பள்ளிகளில், 2,582 ஆசிரியர்களுடன் கூடுதலாக, 1,500 ஆசிரியர்களை நியமிக்க, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியர் பதவியில், 2,222 காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., சார்பில், போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டது. நாளை மறுநாள், இந்த தேர்வு நடக்க இருந்த நிலையில், சென்னை மற்றும் தென் மாவட்டங்களின் கனமழை பாதிப்பு காரணமாக, பிப்.,4க்கு தள்ளி வைக்கப்பட்டது.இதற்கிடையில், 2,222 இடங்களுடன் கூடுதலாக, 360 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக் கொள்ள, கடந்த நவம்பரில் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, பள்ளி கல்வித்துறை அனுமதி அளித்தது.இந்நிலையில், அரசு தொடக்க பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பதவியில், 1,500 காலியிடங்களையும் கூடுதலாக சேர்த்து, ஆசிரியர் தேர்வு வாரியம் பணி நியமனங்களை மேற்கொள்ள, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, பள்ளிக்கல்வி செயலர் குமரகுருபரன் பிறப்பித்துள்ள அரசாணை:தற்போது ஒவ்வொரு பள்ளியிலும், உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடைய, ஆசிரியர்கள் தேவையுள்ள பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும். புதிதாக தேர்வு செய்ய உள்ள, இடைநிலை ஆசிரியர்களை, பட்டதாரி ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து நியமிக்க வேண்டும்.இந்த முன்னுரிமை மாவட்டங்களில், ஆசிரியர்களை நியமிக்கும் போதே, குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள், அந்த மாவட்டங்களில் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையை நியமன உத்தரவில் குறிப்பிட வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்