மேலும் செய்திகள்
ராகுல் - பிரியங்கா இடையே சண்டை: கொளுத்தி போடும் மத்திய அமைச்சர்
20 hour(s) ago | 6
திருப்பூர் : திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களை உள்ளடக்கி, 'அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம்' வடிவமைக்கப்பட்டது. இது, மூன்று மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கை. 'கடந்த, 1963ல், இத்திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்' என முதன்முறையாக சட்டசபையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.பின் நடந்த ஒவ்வொரு சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில், அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கையில், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றுவோம்' என்ற வாக்குறுதி இடம் பெறுவது வாடிக்கையானது.கடந்த, 2019ல், அப்போதைய முதல்வர் பழனிசாமி, திட்டத்துக்கு தேவையான, 1,652 கோடி ரூபாயை ஒதுக்கினார். அவிநாசியில், 2019 பிப்., 28ல், அவரது தலைமையில் அடிக்கல் நாட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடந்தது; பின், பணிகள் 'விறுவிறு'வென துவங்கின.கடந்த, 2021 சட்டசபை தேர்தலின் போது, 80 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், பணியில் தொய்வு தென்பட்டது. திட்டத்துக்கான நிலம் கையெடுப்பு விவகாரத்தில் சம்மந்தப்பட்ட விவசாயிகளுடன் உடன்பாடு எட்டப்படவில்லை. மழையின்மையால் திட்டத்துக்கான நீராதார பகுதியான பவானி ஆற்றில் நீர் வரத்து குறைவு என்பது போன்ற பிரச்னைகள் தான் தாமதத்துக்கு காரணம் என, அமைச்சர்கள் துரைமுருகன், முத்துசாமி உள்ளிட்டோர் தெரிவித்துவந்தனர். இந்நிலையில், நாளை, இத்திட்டத்தை, அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில், முதல்வர் ஸ்டாலின் 'வீடியோ கான்பரன்ஸிங்' வாயிலாக, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். திட்டத்துக்கு, '1,916.41 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது' என, அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.ஈரோடு மாவட்டம், பவானி நீரேற்று நிலையப் பகுதியில் இதற்கான நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. மூன்று மாவட்டங்களிலும், 1,045 குளம், குட்டைகள் தேர்வு செய்யப்பட்டு, நீர் செறிவூட்டப்பட உள்ளது. இதற்காக, 1,046 கி.மீ., நீளத்துக்கு குழாய் பொருத்தப்பட்டுள்ளது; ஆறு இடங்களில் பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டிருக்கிறது.
அத்திக்கடவு - அவிநாசி திட்ட செயற்பொறியாளர் நரேந்திரன் கூறியதாவது: தேர்ந்தெடுக்கப்பட்ட, 1,045 குளம் குட்டைகளிலும் வெள்ளோட்டம் பார்க்கும் பணி நிறைவு பெற்றுவிட்டது. சில நாட்களாக மேற்குதொடர்ச்சி மலை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையால் பவானி ஆற்றில் தேவைக்கேற்ப தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது.திட்டப்பணியை மேற்கொண்ட 'எல் அண்ட் டி' நிறுவனத்தினர், திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததும் ஐந்து ஆண்டு காலம் இயக்கி, பராமரிப்புப்பணி மேற்கொள்வர். சில இடங்களில் பிற துறையினர், உள்ளாட்சி நிர்வாகத்தினர் சார்பில் சாலையோரம் குழாய் பதிப்பு மற்றும் பராமரிப்புப்பணி மேற்கொள்ளப்படும்போது, அத்திக்கடவு குழாய் பாதிக்கப்படுகிறது.அத்தகைய இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அதை சரி செய்வதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. குளம், குட்டைகளில் செறிவூட்டப்படும் நீரின் அளவை அறிந்து கொள்ளும் வகையில் 'சென்சார்' உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன; சில இடங்களில் அவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்று விடுகின்றனர்; சேதப்படுத்தி விடுகின்றனர்.திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்பு தான், இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து, ஆலோசிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
20 hour(s) ago | 6