உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மக்காச்சோள சாகுபடி பரப்பை அதிகரிக்க வேளாண் துறையிடம் விவசாயிகள் வலியுறுத்தல்

மக்காச்சோள சாகுபடி பரப்பை அதிகரிக்க வேளாண் துறையிடம் விவசாயிகள் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:மக்காச்சோளம் சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்கு, வேளாண் துறை நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், அதிகளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு அதிகளவு நீர் தேவைப்படுகிறது. தமிழகம் நீர் பற்றாக்குறை மாநிலம் என்பதால், நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், பாசனத்திற்கு நீர் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஆண்டுதோறும் ஏற்படுகிறது. இதனால், பயிர்கள் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் காப்பீட்டு நிறுவனங்களிடம் இழப்பீடு பெற, விவசாயிகள் காத்திருக்கின்றனர். ஆனால், மக்காச்சோளம் உட்பட சிறுதானியங்களை சாகுபடி செய்வதன் வாயிலாக, விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைக்கும். விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில், நீர் தேவை குறைந்த மாற்று பயிர்கள் சாகுபடி திட்டத்தை, மத்திய, மாநில வேளாண் துறைகள் ஊக்குவித்து வருகின்றன. நெற்பயிரைக் காட்டிலும், குறைந்த நீரில் மக்காச்சோளத்தை சாகுபடி செய்ய முடியும். தற்போது, நுண்ணீர் பாசன கட்டமைப்புகளை பயன்படுத்தி, பல்வேறு மாநிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. நாடு முழுதும் மக்காச்சோளம் சாகுபடி நடந்து வந்தாலும், அதன் தேவை அதிகரித்தவண்ணம் உள்ளது. தமிழகத்தில் மக்காச்சோள சாகுபடியை ஊக்குவிக்க, திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ், செயல்விளக்க திடல்கள் அமைப்பதற்கு மட்டும், ஏக்கருக்கு 2,000 ரூபாய் மட்டுமே மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு இத்திட்டத்திற்கு 1.60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. நடப்பாண்டு இத்திட்டத்திற்கு 1.63 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய நிதியாண்டில் இத்திட்டத்தை செயல்படுத்த, கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சட்டசபையில், வரும் 22ல், வேளாண் துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன்பின், துறையில் செயல்படுத்தவுள்ள புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிடஉள்ளார். மக்காச்சோள சாகுபடிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து, இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆர்.விருத்தகிரி கூறியதாவது:பெரம்பலுார், அரியலுார், திருச்சி, சேலம், நாமக்கல், திருப்பூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில், மக்காச்சோளம் சாகுபடி நடந்து வருகிறது. நெல்லை காட்டிலும் அதிக வருவாய் கிடைப்பதால், விழிப்புணர்வு காரணமாக, சாகுபடியில், இம்மாவட்ட விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். மற்ற மாவட்ட விவசாயிகள் பயன் பெறும் வகையில், திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். தற்போது, 8.64 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடந்து வருகிறது. இதன் வாயிலாக, ஆண்டுக்கு 28 லட்சம் டன் அளவிற்கு மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. தேவை அதிகமாகவுள்ளது; சாகுபடியை அதிகரித்தால், விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைக்கும். ஒரு ஏக்கர் மக்காச்சோளம் பயிர் செய்வதற்கு, மூன்று முதல் நான்கு கிலோ விதை தேவை. ஒரு கிலோ விதை, 400 முதல் 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மக்காச்சோளம் சாகுபடிக்கு, அதிகளவு உரங்கள் தேவைப்படுகின்றன. எனவே, விதைகள் மற்றும் உரங்களை மானியமாக வேளாண் துறையினர் வழங்க வேண்டும். சாகுபடி பரப்பு விரிவாக்கத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். அவ்வாறு செய்தால், ஆண்டுக்கு மூன்று முறை கூட, விவசாயிகளால் மக்காச்சோள சாகுபடி மேற்கொண்டு, வருவாய் பெற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்