ஆரணி லோக்சபா தொகுதியில், தேர்தலுக்கு முன் வாக்காளர்களுக்கு கொடுத்த டோக்கனுக்கு, பணம் கொடுக்காததால் பொது மக்கள் நிர்வாகிகளிடம் பணம் கேட்டு நச்சரிக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெ.,மறைவிற்கு பிறகு சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், தினகரன் போட்டியிட்டார். தேர்தலுக்கு முன், கட்சி நிர்வாகிகள் மூலம் வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கனாக வழங்கப்பட்டது.வெற்றி பெற்ற பிறகு, கொடுக்கப்பட்ட 20 ரூபாயில் உள்ள சீரியல் எண்ணைக் கூறினால், வாக்காளர்களுக்கு தகுந்த கவனிப்பு நடத்தப்படும் என்று உறுதி கூறப்பட்டது. அந்த தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றார். ஆனால் 20 ரூபாய் டோக்கனுக்கு கடைசி வரை பணம் தரவில்லை.அதே பாணியில், ஆரணி லோக்சபா தொகுதியில் (போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மயிலம்) மட்டும் புது மாதிரியாக, கவனிப்பிற்கு பதிலாக தேர்தல் ஓட்டுப்பதிவிற்கு மூன்று நாட்களுக்கு முன்பே, கட்சி நிர்வாகிகள் மூலம் நகரம், கிராமங்களில் வீடு வீடாக டோக்கன் (கருணாநிதி படம், நுாற்றாண்டு விழா லோகோவுடன்) வழங்கப்பட்டது. ஒரு ஓட்டிற்கு ஒரு டோக்கன் வழங்கப்பட்டது.வழங்கும் போது தேர்தல் முடிந்ததும் அடுத்த நாள் டோக்கனை காண்பித்தால் கவனிப்பு நடக்கும் என கூறப்பட்டது.இந்நிலையில் கடந்த 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது. அடுத்த நாளான 20ம் தேதி டோக்கனுக்கு பணம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் நேற்று 22ம் தேதி வரை பணம் வழங்கப்படவில்லை.இதனால் பல இடங்களில், டோக்கன் வழங்கிய ஆளுங்கட்சி நிர்வாகிகளிடம், பலர் டோக்கனுக்குரிய கவனிப்பு எங்கே என கேட்டு தொந்தரவு செய்யத் துவங்கி விட்டனர். இதனால் டோக்கன் கொடுத்த நிர்வாகிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.டோக்கன் கொடுத்தவர்கள் பெரும்பாலானவர்கள் ஆளுங்கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகளாக இருப்பதால், அடுத்து வரும் தேர்தலில் அவர்களுக்கு பிரச்னை ஏற்படும் என்பதால், டோக்கன் விவகாரம் குறித்து, கட்சி மேலிட நிர்வாகிகளிடம் டோக்கனுக்குரிய கவனிப்பை விரைந்து வழங்க வேண்டும் என நச்சரித்து வருகின்றனர். மேலும், பொதுமக்களைக் கண்டால் நழுவுகின்னர்.-நமது நிருபர்-