சென்னை: கஞ்சா போதையில் இருந்த சிறுவர்களால் சரமாரியாக வெட்டப்பட்ட ஒடிஷா வாலிபர், சென்னை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு வந்த நிலையில், அவசர அவசரமாக சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் சுராஜ், 20. இவர், கடந்த 27ம் தேதி, திருத்தணி ரயில் நிலையம் அருகே, உடல் முழுதும் வெட்டுக்காயங்களுடன், ஆபத்தான நிலையில் கிடந்தார். திருத்தணி போலீசார் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். போதையில் இருந்த நான்கு சிறுவர்கள், ஒடிஷா வாலிபரை சரமாரியாக வெட்டும் காட்சிகள், சமூக வலைதளத்தில் வெளியாகி, பார்ப்போரை பதைபதைக்க வைத்தது. இதையடுத்து, திருத்தணி, அரக்கோணத்தை சேர்ந்த, பிளஸ் 2 மாணவர் உட்பட, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் போதை கலாசாரம் பெருகிவிட்டதையே,இந்த சம்பவம் காட்டுவதாக, அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே, திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, ஒடிஷா வாலிபர் சுராஜ், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். வெட்டுக்காயங்கள் அதிகம் உள்ளதால், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு, டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைத்தனர். நேற்று காலை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு, டாக்டர்கள் பரிசோதித்து, உள்நோயாளியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். ஆனால், அவர் மருத்துவ மனையில் இல்லை. தன் விருப்பத்தின்பேரில், அவர் சென்று விட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வடக்கு மண்டல ஐ. ஜி., அஸ்ரா கர்க் கூறுகையில் , ''ஒடிஷா வாலிபர், அவரது விருப்பத்தின்படி, டாக்டர்களிடம் எழுதி கொடுத்துவிட்டு, சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். அது, அவரின் தனிப்பட்ட விருப்பம். இங்கேயே தான் சிகிச்சை பெற வேண்டும் என, அவரை கட்டாயப்படுத்த முடியாது,'' என்றார். இந்த விவகாரம் தமிழக அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ள நிலையில், மாநில அரசின் ஏற்பாட்டின் பேரில், வாலிபர் அவசர அவசரமாக சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக, அரசியல் கட்சியினர் கூறுகின்றனர்.
போதையால் நடந்தது தான்: அஸ்ரா கர்க்
வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கர்க், நேற்று அளித்த பேட்டி: ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த, 20 வயது நபர், ஒன்றரை மாதங்களுக்கு முன் தமிழகம் வந்துள்ளார். அவர் வேலை தேடி வரவில்லை; சுற்றுலா பயணி போல வந்துள்ளார். சென்னையில் இருந்து ரயிலில் அரக்கோணம், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுள்ளார்.
கடந்த, 27 ம் தேதி, சென்னையில் இருந்து ரயிலில் திருத்தணி சென்றுள்ளார். அவர் பயணித்த ரயில் பெட்டியில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியைச் சேர்ந்த, 17 வயது சிறார்கள் இருவரும், அதே வயதுடைய, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த இரண்டு சிறார்களும் சென்றுள்ளனர்.
நான்கு பேரையும், ஒடிஷா வாலிபர் முறைத்து பார்த்தாக கூறப்படுகிறது. இதனால், ரயிலிலேயே தாக்க முயன்றுள்ளனர். இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால், ஒடிஷா வாலிபரை, திருத்தணி ரயில் நிலையம் அருகே அழைத்துச் சென்று, பட்டா கத்தியால் தாக்கி உள்ளனர். அதை வீடியோ எடுத்து, 'ரீல்ஸ்' வெளியிட்டுள்ளனர்.
அந்த வாலிபருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர் சொந்த விருப்பத்தின்பேரில், சொந்த மாநிலம் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட வாலிபருக்கு தமிழ் தெரியாது. ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உதவியுடன் புகார் பெறப்பட்டது.
குற்றச்செயலில் ஈடுபட்ட நான்கு சிறார்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் வகையில், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு உள்ளனர். சிறார்களிடம் இருந்து, இரண்டு பட்டாகத்தி, இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வட மாநில வாலிபர் என்பதற்காக நடந்த தாக்குதல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவரை தாக்கிய சிறார்கள், ஏதோ ஒருவகையான போதை பொருளை பயன்படுத்தி உள்ளனர்.
அதுபற்றி விசாரணை நடக்கிறது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில், வட மாநிலங்களைச் சேர்ந்தோர் அதிகம் உள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறோம். இச்சம்பவத்தை தவிர, மற்ற இடங்களில் வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எவ்வித புகாரும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.