UPDATED : மார் 11, 2024 08:01 AM | ADDED : மார் 11, 2024 05:55 AM
மதுரை : கூட்டணி கட்சிகளை கத்தரிக்கோலால் வெட்டி விட்டுறலாமா என மதுரை லோக்சபா தொகுதியில் தி.மு.க., போட்டியிட வேண்டும் என வலியுறுத்திய நிர்வாகிகளிடம் முதல்வர் ஸ்டாலின் டென்ஷனாகி பேசினார்.தி.மு.க.,வில் லோக்சபா தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் சென்னையில் நடந்தது. மதுரை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். 'மதுரை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்' என்றார். அப்போது நிர்வாகிகள் மதுரை தொகுதியை தி.மு.க.,வுக்கு ஒதுக்க வலியுறுத்தி பேசினர். அவர்களிடம் முதல்வர் டென்ஷன் ஆகியுள்ளார்.இதுகுறித்து நேர்காணலில் பங்கேற்ற நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கூட்டணிக்கு மதுரை ஒதுக்கப்பட்டது என ஸ்டாலின் தெரிவித்தபின் மதுரை பாரம்பரியமான நகரம். கருணாநிதி இருந்தவரை 'சென்னை அலுவலக ரீதியான தலைநகர் என்றால், மதுரை அரசியல் ரீதியான தலைநகர்' என தொடர்ந்து முக்கியத்துவம் அளித்தார். ஆனால் தற்போது மதுரை, அதை சுற்றியுள்ள தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. இதனால் கட்சியினர் சோர்வடைந்து வருகின்றனர். தென் மாவட்டங்களில் எப்படி கட்சி வளரும் என்றோம்.அதற்கு 'இந்த கூட்டணியை கஷ்டப்பட்டு உருவாக்கியுள்ளேன். கூட்டணி வேண்டாம் என அனைவரும் எழுதித் தருகிறீர்களா. கருணாநிதி காலம் என்பது வேறு. தற்போது கம்ப்யூட்டர் காலம். தேர்தல் முடிந்த பின் கூட்டணியை கத்தரிக்கோலால் வெட்டி விட்றுவோமா (அப்போது விரல்களை கத்தரிக்கோல் போல் சைகையில் காட்டினார்)' என டென்ஷனாகி பேசினார். அப்போது எங்கள் கருத்தைத்தான் சொன்னோம். நீங்கள் எந்த வேட்பாளர்களை நிறுத்தினாலும் வெற்றி பெற வைக்கிறோம் என வேறு வழியின்றி சமாளித்தோம் என்றனர்.